முதல் 'க்ளேடியேட்டர்' திரைக்கதை மிக மோசமாக இருந்தது: நாயகன் ரஸ்ஸல் க்ரோ

'க்ளேடியேட்டர்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது என்பதை வைத்துதான் அந்தப் படத்தில் நடித்ததாகவும், முதலில் தான் படித்த திரைக்கதையை வைத்து அதில் நடிக்கவில்லை என்றும் நடிகர் ரஸ்ஸல் க்ரோ கூறியுள்ளார்.

2000-ம் ஆண்டு வெளியான 'க்ளாடியேட்டர்' திரைப்படம் நடிகர் ரஸ்ஸல் க்ரோ மற்றும் இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை அறியப்படுகிறது. தனக்குத் துரோகம் செய்து, தன் குடும்பத்தைக் கொலை செய்த அரசனைக் கொல்லும் ஒரு போர்வீரனின் கதை 'க்ளாடியேட்டர்'. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் 460 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.

இந்தப் படம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஸ்ஸல் க்ரோ கூறியிருப்பதாவது:

" 'க்ளாடியேட்டர்' ஒரு தனித்துவமான அனுபவம். ஏனென்றால் அவர்களிடம் இருந்த திரைக்கதை மிக மிக மோசமாக இருந்தது. நான் அதைப் படித்தேன் என்பது தயாரிப்பாளருக்குத் தெரியாது. ஆனால் அவர் என்னிடம், 'நாங்கள் எங்களிடம் இருக்கும் திரைக்கதையை அனுப்ப விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் அதைப் படித்துப் பதில் சொல்ல மாட்டீர்கள். ஆனால், நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய விஷயம் இதுதான். இது 180 கி.பி. களம், நீங்கள் ரோமானியத் தளபதி, ரிட்லி ஸ்காட் உங்களை இயக்குகிறார்' என்றார்.

நான் ரிட்லி ஸ்காட்டைச் சந்திக்க ஒப்புக்கொண்டேன். அவர் படம் எப்படி உருவாகும் என்று தனது பார்வையைச் சொன்னார். முதல் சந்திப்பிலேயே நான் வியந்துவிட்டேன். அந்த முதல் சந்திப்பிலேயே நாங்கள் நல்ல நண்பர்களானோம். அந்த நேரத்தில் அந்தப் படத்தை ஒப்புக்கொண்டதில் சிறிய ஆபத்து இருந்தது.

பெரிய நம்பிக்கையின்றிதான் முதல் நாள் படப்பிடிப்புக்குச் சென்றேன். ஆனால், படப்பிடிப்பு முடிந்தபோது, நாங்கள் விசேஷமான ஒரு படத்தைச் செய்திருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. அந்த ஒட்டுமொத்தக் குழுவின் ஒன்று சேர்ந்த ஆற்றல், நேர்மறை எண்ணம், அற்புதமாக இருந்தது".

இவ்வாறு ரஸ்ஸல் க்ரோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE