இறைச்சி தொழிற்சாலைகள் நோய்களின் கூடாரம்: ஏமி ஜாக்சன் கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கோவிட்-19 பரவலுக்குக் காரணமாக இருப்பதாக இறைச்சி தொழிற்சாலைகள், கசாப்புக் கடைகளை நடிகை ஏமி ஜாக்சன் கடுமையாகச் சாடியுள்ளார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 தொற்று கிட்டத்தட்ட அனைத்து மக்களது வாழ்க்கையையுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தினாலும், முறையான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இந்தத் தொற்று தொடரும் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் இறைச்சி தொழிற்சாலைகள், கசாப்புக் கடைகளில் நோய்த்தொற்று அதிகமாகக் காணப்படுவதாக பிபிசி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பகிர்ந்திருந்தது.

இதைக் குறிப்பிட்டும், இன்னொரு செய்தி காணொலியையும் ட்வீட் செய்திருக்கும் நடிகை ஏமி ஜாக்சன், "இறைச்சி சந்தைகள், கசாப்புக் கடைகள், இறைச்சி தொழிற்சாலைகள் எல்லாம் பல்வேறு வகையில் நோய்களைப் பெருக்கும் இடங்கள். இந்த தொழிற்சாலைகள் குளிராக, ஈரமாக, காற்றோட்டம் இல்லாததால் தான் அங்கிருப்பவர்களுக்கு நோய் எளிதில் பரவுகிறது என்கிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற சூழல் மிருகங்களுக்கு மட்டும் சிறந்ததா?

இறைச்சிக் கூடங்களுக்குப் பின் இருக்கும் உண்மையை ஏன் இன்னும் மறைக்கிறார்கள்? அந்த சுவர்களுக்குப் பின் என்ன நடக்கிறது? அவை மோசமான நோய்கள் நிறைந்திருக்கும் பயங்கரமான கூடாரங்கள். இறைச்சிக் கூடங்களில் கோவிட் பரவுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏமி ஜாக்சன், விலங்குகள் நலனுக்கான பீட்டா அமைப்பின் தூதராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE