ஆமிர் கானிடம் கற்றுக்கொண்ட ரீமேக் பாடம் என்ன? - ஆயுஷ்மான் குரானா பகிர்வு

தான் நடிகர் ஆமிர் கானின் மிகப்பெரிய விசிறி என்று கூறும் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தான் பாலிவுட்டுக்கு வரும் முன்னரே ஆமிர் கானிடம் கற்ற பாடம் என்ன என்பது பற்றியும், அது எப்படி தனது பயணத்தில் உதவியது என்பது பற்றியும் பகிர்ந்துள்ளார்.

நாயகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பாராட்டுகளைப் பெற்று வருபவர் ஆயுஷ்மான் குரானா. இவர் படம் என்றாலே கண்டிப்பாக வித்தியாசமாகத்தான் இருக்கும் என்ற ஒரு பிம்பம் உருவாகியுள்ள அளவுக்கு 'விக்கி டோனர்', 'பதாய் ஹோ', 'பாலா', 'ஷுப் மங்கள் ஸ்யாதா ஸாவ்தான்' எனத் தொடர்ந்து வழக்கத்துக்கு மாறான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2017-ம் ஆண்டு, தமிழில் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். ஆனால் ஆமிர் கானிடம் கற்ற பாடம் காரணமாக, தான் தமிழ்ப் படத்தைப் பார்க்காமல் இந்தியில் நடித்ததாகக் கூறுகிறார் குரானா.

"நான் அசல் படத்தைப் பார்க்கவில்லை. இன்னும் பார்க்கவில்லை. அதுதான் நான் ஒரு கதையை அணுகும் விதம். என்னை யாராவது ரீமேக்குடன் அணுகினால் நான் அசல் படத்தைப் பார்க்க மாட்டேன். திரைக்கதை வடிவத்தை மட்டும் படிப்பேன். நகைச்சுவை, உணர்வுகள், படத்தின் கரு அனைத்தும் மொழி மாற்றத்தில் காணாமல் போய்விடும். இது அடிக்கடி நடந்திருக்கும் விஷயம்.

மேலும், அசல் படத்தைப் பார்க்கும் போது அந்த நடிகரின் தாக்கம் எனக்கு வரும். நான் நடிக்கும்போது என் சுயமான நடிப்பைத் திரையில் கொண்டு வருவது கடினமாக இருக்கும். எனவே நான் திரைக்கதையைப் படித்து என் அபிப்ராயத்தைக் கூறுவேன். இதை நான் ஆமிர் கானிடம் கற்றேன்.

எம்டிவியில் நான் தொகுப்பாளராக இருந்தபோது 'கஜினி' படத்துக்காக அவரைப் பேட்டி எடுத்தேன். அசல் படத்திலிருந்து எந்த விதத்தில் இந்த ரீமேக் வேறுபட்டுள்ளது என்று நான் அவரிடம் கேட்டபோது, தான் இன்னும் அசல் வடிவத்தைப் பார்க்கவில்லை என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் திரைக்கதையைப் படித்ததாகவும், அது அற்புதமாக இருந்ததாகவும் சொன்னார். அதை ஒரு பெரிய பாடமாக நான் எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறேன்" என்று ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE