கோயிலில் உருகி வாசித்த நாதஸ்வரக் கலைஞர்: கவிதையால் பாராட்டிய கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

ஆலயத்தில் தனியாக நாதஸ்வரம் வாசிப்பவரைப் புகழ்ந்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கவிதை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் பலர் சமூக வலைதளங்கள் பக்கம் அதிகம் வருவதில்லை. ஆனால் நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சி நிறுவனருமான கமல்ஹாசன், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை அன்று, சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் இருக்கும் திருநீலகண்டேஷ்வரர் கோயிலில் தனியாக நாதஸ்வரம் வாசிக்கும் இசைக் கலைஞரின் காணொலியைப் பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன், அதோடு சேர்த்து, அந்தக் கலைஞரை வெகுவாகப் பாராட்டி, கவிதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

"கூட்டம் அதிகமில்லாத கோயிலில் ஒரு கலைஞர் எந்த வணிக நோக்குமின்றி இறைவனைத் தனது இசையால் குளிப்பாட்டுகிறார். தெய்வம் இருப்பது உண்மையென்றால், இறங்கி வந்து, இப்படி உருகி வாசிக்கும் ஒரு கலைஞனின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தோள் மீது தலை சாய்க்க வேண்டும்“ என்ற பொருள்படும்படி ஆரம்பிக்கும் இந்தக் கவிதை, இன்னும் பல வரிகள் நீள்கிறது. மேலும், உயர்ந்த கலைஞர்கள், வணிகமயமாக்கல் என்ற காற்றில், மறைந்து போகிறார்கள் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காணொலியில் நாதஸ்வரம் வாசிக்கும் இசைக் கலைஞரின் பெயர் பாகனேரி கே.பில்லப்பன். அந்த மாவட்டத்தில் இவர் பிரபலம். மியான்மர், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சியில் வாசித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தோடி ராகத்தில் நாதஸ்வரம் வாசித்ததை ஒருவர் பகிர்ந்ததிலிருந்து இவரைப் பற்றிய அடுத்தடுத்த காணொலிகள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளன. இதில் ஒரு பதிவு கமல்ஹாசனின் கண்களில் பட்டது.

'தி இந்து ஆங்கிலம்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பில்லப்பன் கூறுகையில், "நான் எனது அப்பா கோட்டைசுவாமி பிள்ளையிடமிருந்து தான் நாதஸ்வரம் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். என் அப்பா வேதாரண்யம் வேதமூர்த்தியின் சீடர். சிவகங்கை சமஸ்தானத்துக்குச் சொந்தமான கோயிலில் நான் பணியாற்றி வருகிறேன். கோவிட்-19 நெருக்கடி, என்னைப் போன்ற கலைஞர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. திருமணங்களும் இல்லை, கோயில் விழாக்களும் இல்லை. கோயிலில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து சமாளித்து வருகிறேன்" என்றார்.

கமல்ஹாசனின் ட்வீட்டைப் பற்றி சொன்னபோது, "கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமல்ல, இசைக் கலையை நன்றாகக் கற்றுள்ள நிபுணர். அவரது கனிவான வார்த்தைகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்று பில்லப்பன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE