எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஒரே திரைப்படம்: நினைவுகள் பகிரும் நாயகி பி.எஸ். சரோஜா

By செய்திப்பிரிவு

அந்தக் கால தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஒருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. 1954 ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவியும், படத்தின் நாயகியுமான பி.எஸ்.சரோஜா, எப்படி இருவரையும் இணைத்தது சாத்தியமானது என்பது பற்றிப் பகிர்ந்துள்ளார்.

"எனது கணவர் டி.ஆர்.ராமண்னா இரண்டு பேருடனும் நெருங்கிய நட்புடன் இருந்தார். ஒருவரை ஒருவர் அண்ணா என்றே அழைத்துக்கொள்வார்கள். பல நேரங்களில், எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது பற்றிய பேச்சு வரும். தான் சொல்லும் தேவைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்று என் கணவர் அவர்களிடமே சொல்வார்.

இருவருமே அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தபோது, இருவரையும் அழைத்து, இருவரையுமே தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து என் கணவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் தான் படத்தின் நாயகி" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் பி.எஸ்.சரோஜா.

படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் தங்கராஜ். அவருக்கு மனைவியாக சரோஜா நடித்திருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகள் 'கூண்டுக்கிளி' படத்தில் குறைவே.

"ஆனால் அந்தக் காட்சிகள் கதைக்கு முக்கியமானவை. அதிகம் பேசப்பட்டவை. இருவருடனும் சேர்ந்து நடிப்பது எனக்கும் அதுதான் முதல் முறை. நான் எப்போதுமே அவர்களைக் கண்டு ஆச்சரியத்தில் இருப்பேன். ஆனால், அவர்களின் தோழமை அணுகுமுறையால் என்னால் எளிதாக நடித்து முடிந்தது" என்றார் சரோஜா.

தற்போது 93 வயதாகும் சரோஜா தனது மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார். இவர் இசையமைப்பாளர். 1941-லிருந்து 1978 வரை திரைத்துறையில் இருந்த சரோஜா, கிட்டத்தட்ட அப்போது நாயர்களாக இருந்த அனைவருடனும் நடித்துள்ளார். கிட்டதட்ட 60 படங்களில் நடித்துள்ள சரோஜா, தனது 10-வது வயதில், பாடகியாக கலைத்துறையில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

- நிகில் ராகவன், (தி இந்து, ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE