இந்தியில் ரீமேக் ஆகிறது 'கனா'?

'கனா' படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்தியிலும் 'கனா' படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான 'சோக்டு (Choked)' வெப் சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்திருந்த சையாமி கெருக்கும் பாராட்டுகள் குவிந்தன.

'சோக்டு' வெப் சீரிஸ் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன், " ‘சோக்டு’ பார்த்தேன். வாழ்த்துகள் சையாமி கெர். உங்கள் நடிப்பு ஆச்சரியப்படுத்தியது. உங்களை விரைவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமொன்றில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக சையாமி கெர், "நன்றி சிவகார்த்திகேயன் சார். உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. ஆம், கிரிக்கெட் படத்துக்கு ஆவலாகக் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவரின் ட்வீட்களை வைத்து 'கனா' படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், யார் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற எந்தவொரு செய்தியுமே வெளியாகவில்லை.

முன்னதாக, 'சோக்டு' வெப் சீரிஸை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் 'கனா' படத்தில் முதலில் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் வேறொரு படத்தில் நடிக்க இருந்ததால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார் என்றும் சையாமி கெர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE