வில்லனாக அறிமுகம்; 'பாக்ஸர்' படத்தின் நிலை: தயாரிப்பாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

வில்லனாக அறிமுகமாக இருப்பது மற்றும் 'பாக்ஸர்' படத்தின் நிலை ஆகியவை குறித்து தயாரிப்பாளர் மதியழகன் விளக்கம் அளித்துள்ளார்.

விவேக் இயக்கத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'பாக்ஸர்'. மதியழகன் தயாரிப்பில், இந்தப் படத்தின் பூஜைக்குப் பிறகு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் அருண் விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

நேற்று (ஜூன் 24) 'பாக்ஸர்' படம் தொடர்பாக ஹேமா ருக்மணி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்தனர். இந்தச் சமயத்தில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கடிதம் சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

அதைத் தாண்டி ஹேமா ருக்மணி, 'பாக்ஸர்' படத்தில் வில்லனாக தயாரிப்பாளர் மதியழகனே நடிக்கவுள்ளதாக அறிவித்தார். நடிகராக அறிமுகமாகவுள்ளது தொடர்பாக மதியழகன் கூறியிருப்பதாவது:

"'பாக்ஸர்' படத்தைத் தொடங்கியபோது, இதுபோன்ற திட்டம் எதுவுமில்லை. பலம் மிக்க எதிர்மறை வேடத்திற்கு உயிரூட்டக்கூடிய சரியான நபரைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து நானும் ஈடுபட்டேன். இறுதியில் இயக்குநர் விவேக் அந்த வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொன்னபோது, அதை ஏற்க நான் தயங்கினேன்.

பரீட்சார்த்த முறையில் என்னை வைத்து சில காட்சிகளைப் படமாக்கியதைப் பார்த்தபின் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயினும் அருண் விஜய், ரித்திகா சிங் மற்றும் பல சீனியர் நட்சத்திரங்களுடன் இணைந்து நடிப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. மேலும் பலம் பொருந்திய நபருடன் குத்துச்சண்டை போடுவது போலல்ல இந்த வேடம். தன் இலக்கை அடையத் துடிக்கும் நாயகனுக்குத் தடை போட்டு, குறுக்கே நிற்கும் வேடம் என்பதால் படக்குழுவினரின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் நடிக்கிறேன்".

இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பாக்ஸர்' படத்தின் நிலை குறித்து மதியழகன், "மூன்று வெவ்வேறு தோற்றங்களில் திரையில் தோன்றும் காரணத்தால் உடல் எடையைக் கூட்ட சற்றே கால அவகாசம் தேவைப்படும் என்பதை 'பாக்ஸர்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதே அருண் விஜய் சார் முன்கூட்டியே என்னிடம் தெரிவித்தார். எனவே, கோவிட்-19 பெருந்தொற்று பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததும், முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் மதியழகன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE