படப்பிடிப்புக்கு முன்னரே சர்ச்சையில் சிக்குகிறதா ப்ரித்விராஜ் திரைப்படம்? 

By செய்திப்பிரிவு

1921-ம் ஆண்டு மலபாரில் நடந்த கிளர்ச்சியில், பிரிட்டிஷ் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வரியம்குன்னத் குன்ஹா அஹமத் ஹாஜியின் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக வந்துள்ள அறிவிப்பு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரித்விராஜ் நாயகனாக நடிக்க, ஆஷிக் அபு மற்றும் பராரி இயக்கும் இந்தப் படம் வரியம்குன்னத்தை நாயகனாக சித்தரித்தே எடுக்கப்படும் என்பதற்காகத்தான் தற்போது கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

1921-ம் ஆண்டு மலபார் பகுதியில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒரு போராட்டம், உள்ளூர் மதச் சண்டையாக மாறி அதில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவம் குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கங்களும், அந்த விளக்கங்களைத் தீவிரமாக நம்பும் பல்வேறு தரப்பும் உள்ளன.

சிலர் இதைப் போராட்டம், என்றும், சிலர் இதைக் கலவரம் என்றும், இன்னும் சிலர் கிளர்ச்சி என்றும் கூறுகிறார்கள். மாப்ளா கிளர்ச்சி என்றும் இந்தச் சம்பவத்துக்குப் பெயருண்டு. அடுத்த வருடம் இந்தச் சம்பவம் நடந்த நூறாவது ஆண்டு என்பதால், அதை முன்னிட்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

வலது சாரி அமைப்புகள் சமூக வலைதளங்களில் இந்தப் படத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பிரிட்டிஷை எதிர்த்த நாயகனாக வரியம்குன்னத் சித்தரிக்கப்பட்டால் இந்தப் படப்பிடிப்புக்கே அனுமதி தரக்கூடாது என்று கோரி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள பராரி, "1921-ல் மலபாரில் நடந்த போராட்டத்துக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகள் வலதுசாரி அமைப்புகளால் நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதில் புதிதாக எதுவுமில்லை. ஆனால், சங்கத்துச் சக்திகள் ஆட்சியில் இருப்பதால் அவர்களின் வெறுப்புணர்வின் தீவிரம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1921 சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம். பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் அடிப்படையில்தான் எங்கள் படம் இருக்கும். சில அமைப்புகள் நோக்கத்துடன் பரப்பும் பொய்களை வைத்து அல்ல" என்று கூறியுள்ளார்.

வரியம்குன்னத் இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என்பதற்கான பல ஆதாரங்கள் இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மங்களம் கோபிநாத் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம் கேரளாவில் இந்தப் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பல்வேறு இந்து அமைப்புகளில் ஒன்றான இந்து ஐக்யவேதியின் மாநிலத் தலைவர் சசிகலா, இவ்வளவு சீக்கிரம் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதில் உள்நோக்கம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

"இது ஒரு மலிவான வியாபார யுக்தி. மாநிலத்தில் வரியம்குன்னத்தைப் பற்றியோ, வேறு யாரைப் பற்றியோ படம் எடுப்பதில் இந்து அமைப்புகளுக்குப் பிரச்சினையில்லை. ஒருவரது வாழ்க்கையை ஒட்டிப் படம் எடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை. கற்பனையான ஒரு விஷயத்தை வைத்து உருவாகும் படத்தை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்.

அதேநேரம் மலபார் கலவரத்தில் இருந்த ஹாஜி உள்ளிட்ட மற்ற தலைவர்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் படங்களுக்கு எதிராக அதே போன்ற படங்கள் எடுக்கப்படும். மேலும் இந்துக்களுக்கு எதிராக அன்று இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படுத்த, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும்" என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சசிகலா கூறியுள்ளார்.

மலபார் போராட்ட நூற்றாண்டை முன்னிட்டு மேலும் மூன்று திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முறையே குஞ்சு முகம்மது, இப்ராஹிம் வெங்கரா மற்றும் அலி அக்பார் ஆகியோர் இந்தத் திரைப்படங்களை இயக்குகின்றனர். இதில் அலி அக்பரின் திரைப்படம், வரியம்குன்னத்தை வில்லனாகச் சித்தரிக்கும் என்றும், இந்தப் போராட்டத்தின்போது எரநாடு மற்றும் வள்ளுவநாடு பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்ட நபராக வரியம்குன்னத்தைச் சித்தரிக்கும் என்றும் தெரிகிறது.

முன்னதாக, 1988 ஆம் ஆண்டே, இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து '1921' என்ற திரைப்படத்தை ஐவி சசி இயக்கியிருந்தார். மம்மூட்டி இதில் நாயகனாக நடித்திருந்தார். ஆங்கிலேயக் காலனிய ஆதிக்கத்துக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், மதக் கலவரமாக மாறியது குறித்து இந்தப் படம் பேசியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்