ஜூலை 31-ம் தேதி நிஜமாகவே 'டெனட்' வெளியாகுமா? - டப்பிங் பணிகள் ஆரம்பம்

By செய்திப்பிரிவு

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' திரைப்படத்தை ஜூலை 31-ம் தேதி உலக அளவில் வெளியிட வார்னர் பிரதர்ஸ் தயாராகி வருகிறது.

ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டாலும் கூட திரையரங்குகள் போன்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்கள் திறக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் அமெரிக்காவில் மட்டும் ஜூலை மாதம் முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் என்ன நிலை என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனாலும் இந்தியா உட்பட பல நாடுகளில், ஒரே நாளில் 'டெனட்' படத்தை வெளியிட வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் இந்தியாவில் வெளியாகவுள்ள தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட டப்பிங் பதிப்புகளுக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்று உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்ட வசனங்களும், அப்படியே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வார்னர் பிரதர்ஸ் தரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதைச் சரிபார்த்து அனுப்பிய பின் உடனடியாக டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் தெரிகிறது.

முன்னதாக, ஜூலை 17-ம் தேதி அன்று 'டெனட்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இப்போது ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை இரண்டாவது அல்லது கடைசி வாரத்திலிருந்து திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், ரசிகர்களை மீண்டும் பெரிய திரைக்கு ஈர்க்க 'டெனட்' சரியான படமாக இருக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

அதேநேரம், 'டெனட்' படத்துக்கு முன்பாகவே டிஸ்னி நிறுவனம், தனது 'முலன்' படத்தை ஜூலை 24 -ம் தேதி அன்று வெளியிடும் என்கிறது ஹாலிவுட் வட்டாரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE