பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜோயல் ஷுமாகர் காலமானார்

'பேட்மேன் ஃபாரவர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் ஜோயல் ஷூமாகர் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 80.

70-களில் ஹாலிவுட்டில் ஆடை வடிவமைப்பாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஷூமாகர். 1981 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். 'செயிண்ட் எல்மோஸ் ஃபயர்' என்ற சிறிய படத்தின் பெரிய வெற்றி ஷூமாகருக்கு ஹாலிவுட்டில் புகழையும், அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து இவர் இயக்கிய 'தி லாஸ்ட் பாய்ஸ்', 'ஃப்ளாட்லைனர்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று இவரை முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாற்றின.

பிரபல எழுத்தாளர் ஜான் க்ரிஷமின் 'தி க்ளையண்ட்' மற்றும் 'எ டைம் டு கில்' ஆகிய நாவல்களைத் திரைப்படமாக்கி அதிலும் வெற்றிகண்டார். தொடர்ந்து 1995-ம் ஆண்டு 'பேட்மேன்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஷூமாகரைத் தேடி வந்தது. இவர் எடுத்த 'பேட்மேன் ஃபாரவர்' திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றது.

இதனால் அடுத்த 'பேட்மேன் அண்ட் ராபின்' படத்தையும் இவரையே இயக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் தரப்பு. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே மீண்டும் தனது சிறிய பட்ஜெட், நல்ல திரைக்கதை பாணிக்கு ஷூமாகர் திரும்பினார்.

'8 எம்.எம்', 'ஃப்ளாலெஸ்', 'டைகர் லேண்ட்', 'ஃபோன் பூத்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' தொடரில் இரண்டு பகுதிகளை ஷூமாகர் இயக்கியிருந்தார்.

நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஷூமாகர் ஜூன் 22-ம் தேதி காலமானார். நடிகர்கள் மாத்யூ மெக்கானகே, ஜிம் கேரி, நிகோலஸ் கேஜ், டெமி மூர் உள்ளிட்ட பலர் ஷூமாகர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE