மார்வெல்லை முந்தப்போகும் டிசி காமிக்ஸ்!- சூப்பர் ஹீரோக்களின் புது யுகம்

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் திரையுலகில் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்துக்கும், டிசி காமிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் நிலவும் போட்டி புகழ்பெற்றது. நம்மூர் தல - தளபதி போட்டியை மிஞ்சிய போட்டி இது. இதுவரை மார்வெல் கையே ஓங்கியிருந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் போட்டியில் முந்துகிறது டிசி காமிக்ஸ்!

உலக அளவில் வசூலில் பெரும் சாதனை படைத்த வரிசையில் முதல் 25 படங்களில் 9 படங்கள் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய படங்கள்தான். இதில் 8 படங்கள் மார்வெல் காமிக்ஸ் (மார்வெல் ஸ்டுடியோஸ்) நிறுவனத்தின் படங்கள். உலக அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்து முன்னணியில் இருப்பதே மார்வெல் காமிக்ஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம்தான்.

மேலே குறிப்பிட்ட 9 சூப்பர் ஹீரோ படங்களின் வரிசையில் ‘அக்வாமேன்’ என்ற ஒரே ஒரு படம்தான் டிசி காமிக்ஸின் (டிசி என்டர்டெயின்மென்ட்) தயாரிப்பு. இந்நிலையில், தனது பாணியில் பல மாற்றங்களைச் செய்து, மார்வெல்லை முந்தத் தயாராகி வருகிறது டிசி காமிக்ஸ்.

போட்டியின் வரலாறு
1939-ல் மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் தொடங்குவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே டிசி காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. புத்தக வடிவிலிருந்த சூப்பர் ஹீரோக்களுக்குத் திரைப்படங்கள் மூலம் உயிர் கொடுத்தது முதன்முதலில் மார்வெல் காமிக்ஸ்தான். 1934-ல், மார்வெல் காமிக்ஸின் முக்கியக் கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்காவை மையமாகக் கொண்டு ரிபப்ளிக் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கேப்டன் அமெரிக்கா’ படத்தைத் தயாரித்தது. இதற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்தே டிசி காமிக்ஸின் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை வைத்து லிப்பர்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ‘சூப்பர்மேன் அண்ட் தி மோல் மேன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. இதையடுத்து வரிசையாகத் தன் கதாபாத்திரங்களை வைத்துப் படம் எடுக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து வந்தது டிசி காமிக்ஸ்.

தன் முதல் படத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் புத்தக விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தியது மார்வெல் நிறுவனம். 42 வருடங்கள் கழித்தே அந்நிறுவனம் மீண்டும் திரைப்படத் துறையில் நுழைந்தது. அசமஞ்சமாகப் போய்க்கொண்டிருந்த இந்தப் போட்டி, டிஜிட்டல் யுகம் பிறந்த பிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. 2005-ம் ஆண்டு டிசி காமிக்ஸும் (வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து), 2008-ம் ஆண்டு மார்வெல் காமிக்ஸும் நேரடியாகப் பட தயாரிப்பில் இறங்கின.

டிசி காமிக்ஸில் உள்ள பிரச்சினைகள்
டிசி காமிக்ஸின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நீதி, நேர்மை தவறாத ஒழுக்கசீலர்களாக வடிவமைக்கப்பட்டிருப்பார்கள். எப்போதும் ஒருவிதமான சீரியஸான மனப்பான்மையுடனே அந்தக் கதாபாத்திரங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் பாத்திரங்கள். ஆனால், மார்வெல் காமிக்ஸின் படங்களில் கதாபாத்திரங்கள் கலகலப்பானவையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். வில்லன்களைப் பந்தாடும்போது மட்டும் சீரியஸாகவும் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வுடனும் இருக்கும். உதாரணத்திற்கு, அயர்ன்மேன் மற்றும் டெட்புல் பாத்திரங்களைச் சொல்லலாம். ரசிகர்கள் மார்வெல் காமிக்ஸை அதிகம் விரும்புவதற்கான முதல் காரணம் இதுதான்.

டிசியின் சீரியஸான ஹீரோக்கள் டிஜிட்டல் யுகக் குழந்தைகளின் மத்தியில் எடுபடவில்லை. இந்தக் குறையைச் சரியாகப் புரிந்துகொண்ட டிசி நிறுவனம், தன் படங்களிலும் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்க்க ஆரம்பித்துள்ளது. நகைச்சுவை சூப்பர் ஹீரோ படங்களுக்காகவே தங்களுடைய ஷஸாம் (Shazam) கதாபாத்திரத்தை வைத்துத் திரைப்படங்களை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். ‘ஷஸாம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் அந்தக் கதைக்குத் தொடர்புடைய ‘ப்ளாக் ஆடம்’ என்ற கதாபாத்திரத்தை வைத்துப் படம் இயக்கும் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டனர் டிசி காமிக்ஸ் நிறுவனத்தினர்.

தற்போது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகரான டுவைன் தி ராக் ஜான்சன், பிளாக் ஆடம் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாகப் போட்டியில் தங்களின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது டிசி நிறுவனம். இதுமட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘தி ஃப்ளாஷ்’ திரைப்படத்தில் நடிக்க, மைக்கேல் கீட்டனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இவர் 1992-ல் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர். அனேகமாக பேட்மேனின் வயதான தோற்றத்தில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல தரப்பு ரசிகர்களின் ரசனைக்கு வளைந்து கொடுக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக டிசி காமிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு காரியத்தின் மூலம் வெளிப்படையாகத் தெரிவித்தது. ‘ஸ்னைடர் கட்’ படம்தான் அதன் புதிய அஸ்திரம்!

ஸ்னைடர் கட்
வசூலில் சாதனை புரிந்த ‘300’ படத்தை இயக்கியதன் மூலம் உலக அரங்கில் பரவலாக அறியப்பட்ட ஸாக் ஸ்னைடர், கிராஃபிக் நாவல்களைத் திரைப்படமாக மாற்றுவதில் வல்லுநர். அதனால்தான் அவரைத் தேடி டிசி காமிக்ஸின் படங்கள் வந்தன. சூப்பர்மேன் கதாபாத்திரத்தை வைத்து அவர் இயக்கிய ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய ‘பேட்மேன் vs சூப்பர்மேன்’ படம் மார்வெல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் போல் பல ஹீரோக்களைக் கொண்ட கதையை உருவாக்குவதற்கான அஸ்திவாரம்தான்.

ஆனால், அந்தப் படத்தின்போதே வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் ஸாக் ஸ்னைடருக்கும் இடையே உரசல்கள் எழுந்தன. பிறகு ஸ்னைடர் இயக்கிய ‘ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவர் எடுத்த பல காட்சிகள் வெட்டப்பட்டு, ‘தி அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ போன்ற படங்களை இயக்கிய ஜாஸ் வீடனை வைத்து படத்தின் பெரும்பகுதியை மீண்டும் உருவாக்கினர். எனினும், 2017-ல் வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

ரசிகர்கள் ஸ்னைடர் எடுத்த காட்சிகளுடன் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை (ஸ்னைடர் கட்) வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் போராடிவந்தனர். ரசிகர்களின் பகைமை தன் பக்கம் திரும்புகிறது என்று உணர்ந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ரசிகர்களின் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளது. எச்.பி.ஓ மேக்ஸ் தளத்தில் ‘ஸ்னைடர் கட்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படம் மாற்றங்கள் இன்றி வெளியாகவுள்ளது. மூன்று வருடங்களாக ரசிகர்கள் இதற்காகக் காத்திருந்தாலும் அந்த காத்திருப்பை எப்படிக் காசாக்குவது என்பதைத் துல்லியமாகக் கணித்துச் செயலாற்றியுள்ளன வார்னர் பிரதர்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் நிறுவனங்கள்.

புதிய யுகத்தின் தொடக்கம்
மார்வெல் காமிக்ஸின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருந்த அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தானோஸின் கதைகள் முடிவடைந்துவிட்டதால் தற்போது மார்வெல் நிறுவனம் தன்னுடைய அடுத்த தலைமுறை ஹீரோக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அயர்ன் மேனின் சக்திகளை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஸ்பைடர் மேன், அயர்ன் மேனின் நீட்சியாக மேம்படுத்தப்பட்ட ஸ்பைடியாக மாறவுள்ளார். இது போக மார்வெல்லின் இதர கதாபாத்திரங்களான பிளாக் விடோ, கேப்டன் மார்வெல் போன்றோருக்கும் தனித் திரைப்படங்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது மார்வெல் காமிக்ஸ்.

அந்த வகையில், மீண்டும் ஒரு தலைமுறைக்கான ஹீரோக்களை உருவாக்கும் கடினமான வேலையில் இறங்கியுள்ளது மார்வெல். இது சாதாரணமாக நடக்கக் கூடிய காரியம் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பந்தயத்தில் முந்திவிட முடிவெடுத்துவிட்டது டிசி காமிக்ஸ் நிறுவனம். தன்னிடம் உள்ள ரகளையான கதாபாத்திரங்களான ஷஸாம், அக்வாமேன், வொண்டர் வுமன், பிளாக் ஆடம், பேட் கேர்ள், பேட்மேன் வரிசைப் படங்கள் எனத் தன் முழு பலத்துடன் கோதாவில் இறங்க ஆயத்தமாகிவிட்டது.

முயல் தூங்கி ஓய்வெடுக்கும் நேரமே ஆமை வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயலாற்ற ஆரம்பித்துள்ளது டிசி நிறுவனம். மார்வெல்லும் கடுமையான போட்டி அளிக்கும் என்று காமிக்ஸ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், ஸ்னைடர் போன்ற திறமைசாலிகளைப் பகைத்துக்கொள்ளாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் டிசி காமிக்ஸ் அடுத்து வரும் ஆண்டுகளில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்பதே காமிக்ஸ் ரசிகர்களின் கருத்து.

வசூலுக்காக இரண்டு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டாலும், இந்தப் போட்டியில் அதிகம் பயனடையப் போவது ரசிகர்கள்தான். மொத்தத்தில் ஹாலிவுட்டில் இனி வரும் காலம் சூப்பர் ஹீரோக்களின் காலமாக இருக்கும்!

-க.விக்னேஷ்வரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE