தேவையற்ற நக்கல், நையாண்டி, ஆபாசப் பேச்சுகளை ஏற்கமாட்டேன்: மாளவிகா மோகனன்

தேவையற்ற நக்கல், நையாண்டி, ஆபாசப்பேச்சுகளை நான் ஏற்க மாட்டேன் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனன், 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால், இந்தப் படம் வெளியாகி இருக்கும். தற்போது திரையரங்கத் திறப்புக்காக படக்குழு காத்திருக்கிறது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கில் 'மாஸ்டர்' குழுவினர் என்ன செய்கிறார்கள் என்று கார்ட்டூன் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் மாளவிகா மோகனன் சமைப்பது போன்று இடம்பெற்றிருந்தது. இதற்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கார்ட்டூன் மாற்றப்பட்டு, புதிதாக வெளியிடப்பட்டது.

தற்போது மாளவிகா மோகனன் 'தி இந்து' நாளிதழுக்குப் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில், " ‘மாஸ்டர்’ படத்துக்காக ரசிகர் ஒருவர் உருவாக்கிய போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்திருந்தீர்களே.. அதைப் பற்றி" என்ற கேள்விக்கு மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

"ஒரு பெரிய திரைப்படத்தின் நாயகி, ரசிகர் உருவாக்கிய போஸ்டருக்கு எதிர்வினை தரும்போது மக்கள் என்னவோ நடக்கிறது என்று கவனித்தார்கள். அந்த போஸ்டரை உருவாக்கிய கலைஞர் இனிமையானவர். அவரது நோக்கம் தவறானதல்ல. ஆனால், பாலினப் பிரதிநிதித்துவம் முக்கியம். அறை முழுவதும் ஆண்கள் வெவ்வேறு வேலைகளில் இருக்கும்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரே பெண் சமைத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? அதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பது மக்களுக்குப் புரியவில்லை.

ஏனென்றால் அதெல்லாம் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. ஆனால் பெண்கள் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லப்பட வேண்டும். அதனால்தான் நான் அதுபற்றிப் பேசினேன். எனக்கு வரும் எதிர்வினைகள் எனக்குப் புரியும். ஆனால் ,தேவையற்ற நக்கல், நையாண்டி, ஆபாசப் பேச்சுகளை நான் ஏற்கமாட்டேன். சமூக வலைதளங்களில் இருக்கும் நடிகைகளை, உருவத்தை வைத்து, குணத்தை வைத்து, அவர்களுக்கு இருக்கும் கருத்தை வைத்து எனப் பல வகைகளில் கேலி செய்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் நான் நினைக்கும் அனைத்து விஷயங்களையும் பேச வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப் பேசினால் அதற்கு வரும் எதிர்வினைகளைச் சமாளிக்க வேண்டும். என் மன அமைதியைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE