உன்னோடு ஒரு வாரம் உதவி இயக்குநரா வேலை செய்யணும்டா: வெங்கட் பிரபுவிடம் கேட்ட பாரதிராஜா

'உன்னோடு ஒரு வாரம் வேலை செய்யணும்டா' என்று கங்கை அமரன் பாராட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா வெங்கட் பிரபுவிடம் தெரிவித்தார்.

ஜூன் 21-ம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு டோக்கியோ தமிழ்ச் சங்கம் கங்கை அமரனுக்குப் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழா ஜூம் செயலி வெளியே நடைபெற்றது.

இதில் உலகமெங்கிலும் உள்ள முன்னணி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், இயக்குநர் பாரதிராஜா, சந்தானபாரதி, மனோபாலா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டு கங்கை அமரனுடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சுமார் 4 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டு, கங்கை அமரனை பாராட்டிப் பேசினார். பின்பு சில நிமிடங்கள் கழித்து கங்கை அமரனுக்குப் பக்கத்தில் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது பாரதிராஜா மீண்டும் பேசியதாவது:

"அவனுடைய 2 குழந்தைகளும் ரொம்பவே திறமைசாலிகள். லண்டனில் படிக்க வைத்தான். இப்போது திரையுலகில் தொழில்நுட்ப ரீதியாக எப்படிடா பண்ண என்று வெங்கட் பிரபுவிடம் கேட்பேன். குறைந்த காலத்திலேயே தன்னைத் தானே அப்டேட் பண்ணிக் கொண்ட ஒரு பையன் வெங்கட் பிரபு. அவர்களுக்கு முன்னால் நான் எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வேன்.

எவ்வளவோ திறமைசாலிகள் வந்திருந்தாலும், உன் மீது எனக்கு பொறாமை. நாங்கள் படம் பண்ணிய காலங்கள் வேறு. ஆனால், இப்போது இவ்வளவு தொழில்நுட்ப ரீதியாக படம் பண்றேனா என்று நினைப்பேன். தொழில்நுட்ப ரீதியில் நீயெல்லாம் எங்கேயோ இருக்கிறாய். இவங்க தொழில்நுட்பத்தை எல்லாம் நல்ல படிச்சுட்டாங்க. நம்ம கிராமத்திலிருந்து உணர்ச்சிகளை மட்டுமே சுமந்திட்டு வந்துட்டோமோ என்று யோசிப்பேன்.

இவனை மாதிரி ஆட்கள்கிட்ட நானும் நீயும் (கங்கை அமரன்) ஒரு வாரம் உதவி இயக்குநராக வேலை பார்க்கணும். எல்.வி.பிரசாத் எவ்வளவு பெரிய ஆள், அவர் என்னிடம் உங்களிடம் ஒரு வாரம் வேலை செய்யணும் என்றார். ஏன் என்றேன். உங்கள் படங்கள் பார்த்திருப்பதால் என்றார். அதே மாதிரி உன்னுடைய படங்களை எல்லாம் நான் பார்க்கிறேன்.

அதனால் உன்னோடு ஒரு வாரம் வேலை செய்யணும்டா. என்ன உபகரணங்கள், என்ன தொழில்நுட்பம், எப்படி ஷாட் வைக்கிறான் என்றெல்லாம் பார்க்கணும் என்று யோசிப்பேன். நம்ம இன்னும் பழைய மாதிரியே டணக்கா.. டணக்கா என்றே எடுத்துட்டு இருக்கோம். லவ் யூடா வெங்கட்".

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

அவருடைய பேச்சை இயக்குநர் வெங்கட் பிரபு ஆச்சரியத்துடன் கேட்டு ரசித்தார்.

அதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கூட, நீ அப்பா மாதிரியே எல்லா நடிகர்கள்கிட்டயும் வேலை வாங்குற என்று மனோஜ் சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE