பல தயாரிப்பாளர்கள் சம்பளம் தரவில்லை: பாலிவுட் கலைஞர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலையும் மீறி பல நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இன்றைய தேதி வரை சம்பள பாக்கி இருக்கிறது என்று பாலிவுட் திரைப்பட, தொலைக்காட்சி ஊழியர்களுக்கான அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

கரோனா நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக தேசிய அளவில் ஊரடங்கு நிலவுகிறது. பலர் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வுகள், பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு வேலைகளும் இதில் அடக்கம். ஆனால் எந்த கலைஞருக்கும் தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைக்கக் கூடாது என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் பல கலைஞர்கள், தங்களுக்கு சம்பளம் சரியாக வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மேற்கிந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பும், திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கலைஞர்கள் சங்கமும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட நிபந்தனைகள், கோரிக்கைகள் எதற்கும் சரியான பதில் வராததால் இந்த அறிக்கையை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"என்றுமே தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் சிறப்பான ஒத்துழைப்பை, ஆதரவைத் தந்து வருகிறோம். ஆனால் அவர்கள் பல விஷயங்களில் இன்னும் தெளிவு தராமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எங்கள் உறுப்பினர்களைப் படப்பிடிப்புக்கு அழைப்பது போன்ற தன்னிச்சையான முடிவுகளைப் பல தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். படப்பிடிப்புகள் துவங்கும் முன்னரே இது ஒருவித அமைதியின்மையையும், தவறான வழிநடத்தலையும் உறுப்பினர்களிடையே உருவாக்கியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், உடலில் பிரச்சினை இருப்பவர்களுக்கு, கோவிட்-19 நெருக்கடி முடிந்த பின், வேலை செய்யும் விதமே மொத்தமாக மாறும். எனவே எங்களின் கவலைகளுக்கு ஒழுங்கான தீர்வுகள் தேவை. அமைச்சகத்தின் கடுமையான அறிவுறுத்தலுக்குப் பின்னும் பல தயாரிப்பாளர்கள், ஊரடங்குக்கு முன் செய்த வேலைக்கே சம்பள பாக்கி வைத்திருப்பது அதிக வருத்தத்தைத் தருகிறது. படப்பிடிப்புகள் துவங்கும் முன்னர், அனைத்து சம்பள பாக்கியும் தீர்க்கப்பட வேண்டும்" என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படப்பிடிப்பில் யாருக்கும் எந்த ஆபத்தும் நேராமல் இருக்க, கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களையும் இத்துடன் வெளியிட்டுள்ளது.

ஒரு நாளைக்குக் கண்டிப்பாக 8 மணி நேரம் மட்டுமே வேலை, நாள் முடிந்ததும் நேரடியாக அவரவருக்குச் சம்பளம் தரப்பட வேண்டும், மேலும் பயணச் செலவும் தரப்பட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் தர வேண்டும், கண்டிப்பாக வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, அரசாங்க ஆணையின் படி பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் காப்பீடு, இறந்து போகும் நடிகர்கள்/பணியாளர்கள்/தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு, வேலை தொடர்ந்த பிறகு எந்த நடிகரும்/பணியாளரும்/தொழில்நுட்பக் கலைஞரும் சம்பளத்தைக் குறைக்க மாட்டார்கள், அப்படி சம்பளத்தைக் குறைக்க மறுத்த காரணத்துக்காக யாரையும் மாற்றக் கூடாது, படப்பிடிப்பு தளத்தில் அனைத்து வசதிகளும் அடங்கிய ஆம்புலன்ஸ், மருத்துவருடன் இருக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE