’தலையைக் குனியும் தாமரையே...’, ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் ஒப்பற்ற பாட்டு

By வி. ராம்ஜி

ஒரு படமோ... அல்லது படத்தின் பாடல்களோ... நம் மனதில் அப்படியே தங்கிவிடும். அதன் பிறகு எத்தனையோ படங்கள் பார்த்திருப்போம். அதேபோல ஏகப்பட்ட பாடல்கள் கேட்டிருப்போம். ஆனாலும் நம் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பாடல், காலங்கள் கடந்தும் முணுமுணுக்கச் செய்துகொண்டே இருக்கும்.

சில படங்களே மனதுக்கு நெருக்கமாக இல்லாத போதும் கூட, அந்தப் படத்தின் பாடல்கள் நம்மில் இரண்டறக் கலந்துவிடும். ‘படம் சுமார்தான். ஆனா பாட்டெல்லாம் பிரமாதம்’ என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருப்போம். அப்படியொரு படம்... ‘ஒரு ஓடை நதியாகிறது’.

தமிழ் சினிமாவின் மரபுகளையெல்லாம் உடைத்துப் போட்டு, புது இலக்கணம் படைத்த இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய படம் இது. கருப்பு வெள்ளை காலம் முதல் எண்பதுகள் வரை எத்தனையெத்தனையோ விதமான உணர்வுகளை, சொல்லத் தயங்குகிற உணர்வுகளைக் கூட பொளேரென்று சொன்ன ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம்... ‘ஒரு ஓடை நதியாகிறது’.

நல்ல மழை. வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. விருந்து ஒன்றுக்குச் சென்றுவிட்டு, முழு போதையில் திரும்பிக்கொண்டிருக்கிறான் நாயகன். வழியில், மழையில் பெண்ணைப் பார்க்கிறான். அவளை பாலியல் வன்கொடுமை செய்கிறான் என்பதில் இருந்து படம் தொடங்குகிறது.

அதன் பின்னர், நொறுங்கிப் போனவள் தந்தையுடன் கிளம்பி வேறு ஊருக்கு வருகிறாள். அங்கே அவளுக்கு குழந்தை பிறக்கிறது. இதனிடையே, அந்தப் பெண்ணைத் தேடுகிறான் நாயகன். ஆனால் அவள் கிடைக்கவில்லை. மது போதையில் செய்தது குற்றமாக, குற்ற உணர்ச்சியாக அவனை குத்திக்கொண்டே இருக்கிறது. பின்னர், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.

அந்தப் பெண்ணை அவன் பார்த்தானா, மகனை அடையாளம் கண்டுகொண்டானா, அந்தப் பெண் அவனைச் சந்திக்கிறாளா, அவனுடைய மனைவிக்கு இவையெல்லாம் தெரிந்ததா என்பதைச் சொன்னதுதான்... ‘ஒரு ஓடை நதியாகிறது’.

’ஏழாவது மனிதன்’ படத்தில் அறிமுகமான ரகுவரன் இதில் நாயகன். அநேகமாக, இரண்டாவது அல்லது மூன்றாவது படமாக இருக்கலாம். இவரின் நடிப்புத் திறன் கண்டு வியந்துதான், ஸ்ரீதர் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார் போலும். கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்தான் என்றாலும் நாம் பார்த்து பிரமித்த அந்த தடாலடி மேனரிஸங்கள், பாடி லாங்வேஜ் கொண்ட ரகுவரனும் அவரின் ஸ்டைலான குரல்மொழியும் இந்தப் படத்தில் இல்லைதான். ஆரம்பக்கட்டம் என்பதாலும் ஸ்ரீதர் சார் என்பதாலும் கொஞ்சம் அடக்கி வாசித்தாரோ என்னவோ?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நாயகி சுமலதா. தேர்ந்த நடிப்பை வழங்கியிருந்தார். அதேபோல், ரகுவரனின் மனைவியாக மனோசித்ரா நடித்திருந்தார். டி.எஸ்.பாலையாவின் மகள் இவர். அவர் மீது கொண்ட அன்புக்காக, அவரின் மகளுக்கு திரையுலகில் ஒரு பாதையை அமைக்க நினைத்து, அவரை இந்தப் படத்தின் இரண்டாவது நாயகியாக்கியிருக்கிறார் ஸ்ரீதர் என்றுதான் சொல்லவேண்டும்.

வைரமுத்துவும் கங்கை அமரனும் பாடல்களை எழுத இளையராஜா இசையமைத்தார். 83ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். ஆனால், ‘ஒரு ஓடை நதியாகிறது’ ஓடவில்லை.

படத்தின் ஆரம்பக் காட்சி, மழை, நாயகன் நாயகியை பலாத்காரம் செய்வது... எல்லாமே ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை நினைவுபடுத்தியிருக்கலாம் ரசிகர்களுக்கு. ’நிழல் நிஜமாகிறது’ ஷோபா, சரத்பாபு கேரக்டர்கள், ‘நூல்வேலி’ சரத்பாபு, சரிதா கேரக்டர்கள் என்பது உள்ளிட்ட படங்கள் நினைவுக்கு வந்திருக்கலாம். அல்லது அந்த அளவுக்கு அழுத்தமான, தாக்கம் தரக்கூடிய வகையில் கதாபாத்திரங்கள் சித்திரிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஏதோ மிஸ்ஸிங்... படம் ஓடவில்லை.

ஆனால், ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. நூறுபேரை நிறுத்தி, அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தால், அதில் இளையராஜா ஹிட்ஸ் என்று ஃபோல்டர் இருக்கும். அந்தப் பட்டியலில், ‘தலையைக் குனியும் தாமரையே...’ பாடல் நிச்சயம் இருக்கும்.
’கனவு ஒன்று தோன்றுதே... இதை யாரோடு சொல்ல... விழியோரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக...’ என்ற பாடலும் என்னவோ செய்யும்.

’தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே...
என்ற பாடலில், வயலின் குழையும்.
‘நீ தீர்க்கவேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பந்திவைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து’

என்று தாமரையும் நாணும்படி, காமத்தைச் சொல்லாமல்சொல்லியிருப்பார் வைரமுத்து.

இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக, வயிலினில் இளையராஜா வித்தை காட்டுவார். விளையாடுவார்.
இரண்டாவது சரணத்தில்...
‘பூவாடைக் காற்று ஜன்னலைச் சார்த்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

என்று காமத்தைக் கவிதையாக்கியிருப்பார் வைரமுத்து.

இன்னொரு பாடல்...
‘தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க...

நீண்டநாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்
தூரம் என்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏனோ கோலம்போட்டேன்
காதல்மேளம் நானும் கேட்டேன்

என்று வைரமுத்து, காதலை தென்றலென தவழவிட்டிருப்பார் தன் வரிகளில்.

இரண்டாவது சரணத்தில்...
காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலிபோடும்
கூடல் என்னை தீண்டச் சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்
காத்துக்கிடந்த சோலையோரம்
கங்கை வந்து பாயும் நேரம்

என்று வார்த்தைகளில் பாய்ந்து பிரவாகமாகியிருப்பார் வைரமுத்து.

‘தலையைக் குனியும் தாமரையே’ பாடலில் எஸ்.பி.பி.யும் உமாரமணனும், ‘தென்றல் வந்து முத்தமிட்டது’ பாடலில் கிருஷ்ணசந்தரும் சசிரேகாவும் தங்கள் குரலால் காதலூட்டியிருப்பார்கள்.
மறக்கமுடியாத பாடல்கள். மறக்கவே முடியாத பாடல்களாக அமைத்திருந்தார் இளையராஜா.

83ம் ஆண்டு, வெளியானது ‘ஒரு ஓடை நதியாகிறது’. இந்தப் பாடல்கள் நமக்குப் பரிச்சயமாகி, 37 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் இரு நதிகளென இளையராஜாவும் வைரமுத்துவும் சங்கமித்துத் தந்த பாடல்களில், ‘தலையைக் குனியும் தாமரை’யும் ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ பாடலும் தனி ரகம்.
காதலிக்காதவர்களையும் குதூகலப்படுத்திவிடும். இந்தப் பாடல்களையும் காதலிக்கவைத்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE