ட்வீட்டுகளை காப்பியடித்தேனா? - நடிகை ஊர்வசி ரவுடேலா விளக்கம்

தனது சமூக ஊடகப் பக்கத்தில் இன்னொருவரின் ட்வீட்டை அப்படியே காப்பியடித்து தனது கருத்தாகப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நடிகை ஊர்வசி ரவுடேலா விளக்கம் அளித்துள்ளார்.

'பாராஸைட்' படம் குறித்து நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின் ட்வீட்டையும், ஊரடங்கின் போது மும்பை காவல்துறையின் செயல்பாடு பற்றிய நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் ட்வீட்டையும் அப்படியே பிரதியெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், தனது கருத்தாக நடிகை ஊர்வசி ரவுடேலா பகிர்ந்திருந்தார். தொடர்ந்து நெட்டிசன்கள் அவர் காப்பியடித்ததைச் சுட்டிக் காட்டி அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இது பற்றி பேசியுள்ள ஊர்வசி, "யாருமே இன்னொருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும் நிலையில் இல்லை. ஒருவர் எழுதுவதை வைத்து அவரைக் குற்றம்சாட்டுவது நியாயமற்றது. ஒரு பிரபலத்துக்குப் பின்னால், அவரது சமூக வலைதள பக்கத்தை நிர்வாகிக்க ஒரு குழு இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.

அதற்கு நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் தங்களுக்குப் பிடித்த எதையும் ஒருவர் பகிரலாம். ஆனால் அதை வைத்து ஒருவரை வசைபாடுவது, துன்புறுத்துவது தவறு. நான் அவ்வப்போது ரூமி, ஆன் ஃப்ராங் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் பழமொழிகளைப் பகிர்கிறேன். ஏனென்றால் அவை ஊக்கம் தருபவை. அதை என் நண்பர்களும், ரசிகர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் நேர்மறை எண்ணத்துடன் இருந்து மற்றவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே வாழ்க்கையின் முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன்.

எனவே, என்னையும், துறையில் மற்ற பிரபலங்களையும் கிண்டல் செய்ய முயற்சிப்பவர்கள், முதலில் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உங்களை நீர்களைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள். எதிர்மறையாக இருப்பதை விட நேர்மறையாக இருந்து, நேர்மறை சிந்தனைகளைப் பரப்பலாம். வீட்டிலே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE