தமிழ் சினிமாவின் சுஷாந்த்களே, தல அஜித்தைப் பாருங்கள்: வாசுகி பாஸ்கர்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் சுஷாந்த்களே, தல அஜித்தைப் பாருங்கள் என்று ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாகவே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், துறையில் இருக்கும் அரசியல் பற்றி, அவர்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் காட்டிய பாரபட்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு பெரும் வைரலானது. அந்தப் பதிவை மேற்கொளிட்டு நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார்.

அதில், "வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் கொண்டாடப்படுகிறார். கடவுளாகப் பார்க்கப்படுகிறார். கடின உழைப்பு என்றும் தோற்காது என்ற வழக்கமான வாக்கியம், பொதுவில் வெற்றி பெற்றவர்களை வைத்து மட்டும்தான் கொண்டாடப்படுகிறது.

உங்களை ஒதுக்கி, உங்கள் முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி, முதுகில் குத்துவார்கள். ஆனால் ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய இந்த கசப்பான அனுபவங்கள் அத்தனையையும் தாங்க வேண்டும்" என்று குறிப்பிட்டார் அஸ்வின்.

நடிகர் அஸ்வினின் பதிவு தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஸ்வினின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு முன்னணி ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நமது தமிழ் சினிமா திரையில் ஏராளமான சுஷாந்த்கள் உள்ளனர். சம்பளம் வாங்காமலும், ஆதரவு இல்லாமலும், அடையாளம் இல்லாமலும். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கேமராவுக்கு முன் தைரியமாகக் காட்டிக்கொண்டு புன்னகைக்கின்றனர். சிலர் என்னிடம் பேசுகிறார்கள், சிலர் அவமானத்தினால் ஏற்படும் வலியுடன் அமைதி காக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு, தல அஜித்தின் அப்போதைய நிலையையும் இன்றைய நிலையையும் நினைத்துப் பாருங்கள்"

இவ்வாறு வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE