டி-சீரிஸ் தலைவர் பூஷன் குமாரை எச்சரிக்கும் பாடகர் சோனு நிகம்

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் இசைத்துறை ஒரு மாஃபியாவைப் போல செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கும் பாடகர் சோனு நிகம், டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பூஷன் குமாரைச் சாடியுள்ளார்.

அருவருப்பான மாஃபியாவுடன் வார்த்தைகளில் பேச முடியாது என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார் சோனு நிகம்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"பூஷன் குமார், இப்போது உங்கள் பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். இப்போது உங்களை மரியாதையுடன் அழைக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நீங்கள் தவறான நபரோடு மோதிவிட்டீர்கள். என் வீட்டுக்கு வந்து எனக்காக ஒரு ஆல்பம் பதிவு செய்யுங்கள் தம்பி. எனக்கு ஸ்மிதா தாக்கரே, பால் தாக்கரேவை அறிமுகம் செய்து வையுங்கள் தம்பி என்று என் வீட்டுக்குக் கெஞ்சியபடி வருவீர்களே, நினைவில் உள்ளதா. அபு சலீமிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள், அபு சலீம் என்னை அச்சுறுத்துகிறான் என்று சொன்னீர்களே நினைவில் உள்ளதா? என்னுடன் மோதாதீர்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்.

மரினா கவர் நினைவில் உள்ளதா? அவர்கள் ஏன் பேசினார்கள், பின் ஏன் பின்வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாஃபியா எப்படி வேலை செய்யும் என்பது ஊடகங்களுக்குத் தெரியும். என்னிடம் இன்னும் அந்த வீடியோ உள்ளது. என்னிடம் மோதினால் அந்த வீடியோவை யூடியூபில் பதிவேற்றிவிடுவேன். எனவே என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்".

இவ்வாறு சோனு நிகம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சோனு நிகம் பகிர்ந்த காணொலியில், இசை நிறுவனங்கள் புதிய இசைக் கலைஞர்களிடம் கனிவாக இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்றும் கோரியிருந்தார். மேலும் இன்னொரு காணொலியில், இரண்டு நிறுவனங்கள்தான் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றும், தான் ஒரு பாலிவுட் நடிகரின் அதிகாரத்தால் பலியானதாகவும் பேசியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE