பாக்யராஜ் பையன்ங்கறதுதான் உனக்கு மைனஸ்! - சாந்தனு எடுத்த பேட்டியில் பாக்யராஜ் கருத்து

By வி. ராம்ஜி

’டேட் சன் பிரஸண்ட்ஸ்’ சார்பில், நடிகர் சாந்தனு, அவரின் தந்தையும் இயக்குநருமான கே.பாக்யராஜை, தந்தையர் தினத்தை முன்னிட்டு பேட்டி எடுத்தார்.

அந்தப் பேட்டி அல்லது உரையாடலின் தொடர்ச்சி இதோ...

‘’கே.பாக்யராஜ் சினிமா, அந்த மேக்கிங்கோட ஸ்டைல் எல்லாத்தைப் பத்தியும் சொன்னீங்க. சரி... இப்போ ஒரு கேள்வி... கே.பாக்யராஜ் இன்னும் சினிமாவுக்குள்ளேயே வரலை. நுழையவே இல்ல. அந்த பாக்யராஜ் பார்த்த வாழ்க்கை எப்படிப்பட்டது?’’ என்று கேட்டார் சாந்தனு.

’’அதாவது... பேஸிக்காவே கஷ்டப்படுற ஃபேமிலிலாம் கிடையாது. ஆரம்பத்துல ஒரு கஷ்டம் இருந்துச்சு. அப்புறமா, என் அம்மா கிராமத்துல நர்ஸ் போல ஆயாம்மா போல வேலை பாத்தாங்க. மாமாவுக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. அப்புறம் சின்ன ஒர்க்‌ஷாப் வைச்சு, மாமாலாம் முன்னுக்கு வந்தாங்க. ஒரு சின்ன ஃபேக்டரி வைச்சாங்க. நூறு பேர் வேலை பாக்கற அளவுக்கு வந்துச்சு. ஆக, என்னை நம்பி ஃபேமிலி இல்ல.

எனக்கு மட்டும் எப்படித் தோணுச்சுன்னா... காலைல 8 மணிக்கு மிஷினைப் போடணும், அப்புறம் 12 மணிக்கு ஆஃப் பண்ணணும். அப்புறம் சாப்பாடு. அதுக்குப் பிறகு சாயந்திரம் வரைக்கும் மிஷின் ஓடணும்னு மிஷின் மாதிரி, ஒரே மாதிரி இருக்கறது எனக்குப் பிடிக்காம இருந்துச்சு. வித்தியாசமா இருக்கணுமேனு ஒரு யோசனை இருந்துக்கிட்டே இருந்துச்சு. தவிர, பள்ளிப்படிப்பின் போதே, டிராமா அது இதுன்னு நிறையக் கலந்துக்கிட்டதும் ஒரு காரணம்.

அப்புறம்... சொல்லிருக்கேனில்லையா... பெரிய ஃபேமிலி எங்களுது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு பெரிய குடும்பம். அப்ப டிவிலாம் கிடையாது. சினிமாதான் பொழுதுபோக்கு. எப்பவாவது பொருட்காட்சி, கண்காட்சின்னு வரும். மூணு வருஷத்துக்கு ஒரு தடவை சர்க்கஸ் வரும். எல்லாரும் சேர்ந்து சினிமாவுக்குப் போகும்போது, நான் சின்னப்பையன். என்னையும் கூட்டிட்டுப் போவாங்க.

அப்பலாம் மாவாட்டற கல்லு இருக்கும். அதுல ஒருத்தங்க ஆட்டுவங்க. சுத்தி எல்லாரும் உக்கார்ந்துகிட்டு கதை பேசுவாங்க. நாலஞ்சு வீட்டுக்கு ஒரு மாவாட்டற கல்லுதான் இருக்கும். அதேபோல ஒரு கிணறு இருக்கும். அஞ்சாறு வீட்டுக்காரங்க துணிதுவைப்பாங்க. அவங்களாம் சினிமா பத்திப் பேசிட்டிருப்பாங்க. அதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்ததால, எனக்கும் சினிமா கிரேஸ் அதிகமாச்சு. ’எம்ஜிஆர் சிவாஜிலாம் நடிக்கிற மாதிரி, நாமளும் நடிக்கமுடியாதா’ன்னு யோசனை வந்துச்சு. டிராமால நடிச்சேன்.

அப்புறம் சினிமாவுக்கு, சென்னைக்கு வந்தேன். ‘வீட்ல இவனுக்கென்ன குறை இருக்கு. ஏன் சினிமா வேலைக்குப் போறான்னு விடமாட்டாங்கன்னு சொல்லாமகொள்ளாம வந்துட்டேன். நானும் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டிருக்கேன். யாரையும் ரத்தினக்கம்பளம் கொண்டு விரிச்சு வரவேற்கலை, சினிமா. நிறைய கஷ்டங்கள், பிரச்சினைகள். இப்போ உன்னையை (சாந்தனு) நினைச்சிக்குவேன். அந்த மாதிரி எந்தக் கஷ்டமும் படாம, நீ வந்துட்டே. நான் அப்படியில்ல. அப்படி பட்ட கஷ்டங்களெல்லாம் பின்னாடி உதவுச்சு. சினிமாவுக்குள்ளே வந்து கதை எழுதும்போதோ, வசனம் எழுதும்போதோ, டைரக்ட் பண்ணும் போதோ, நடிக்கும்போதோ அதெல்லாம் ஹெல்ப்பா இருந்துச்சு.

’நோ பெயின் நோ கெயின்’ன்னு சொல்லுவாங்க இல்லியா... அதுமாதிரிதான் எல்லாரைப் போலவே நானும் கஷ்டப்பட்டிருக்கேன். எங்க டைரக்டரும் (பாரதிராஜா) கஷ்டப்பட்டிருக்கார். ஒருவெறியோட வேலை பாத்தார், ஜெயிச்சார். நானும் அப்படித்தான்.

அடிக்கடி உன்னைத்தான் நினைச்சுக்குவேன். நாமதான் சரியா படிக்கல, இங்கிலீஷ்லாம் தெரியலன்னு உன்னை நல்லாப் படிக்கவைக்கணும்னு சேர்த்தேன். ஸ்கூல் போயிட்டு விளையாடப் போறது அப்படி இப்படின்னு நீ இருந்துட்டே. கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்த்துட்டோமேனு நினைச்சிக்குவேன்’’ என்றார் பாக்யராஜ்.

உடனே சாந்தனு, ‘’கஷ்டம்னா என்னன்னு தெரியாமத்தான் வளர்ந்தேன். ஆனா சினிமாவுக்குள்ளே வந்து எவ்ளோ கஷ்டப்படணுமோ அவ்ளோ கஷ்டத்தையும் இந்தப் பத்து வருஷத்துக்குள்ளே அனுபவிச்சிட்டேன். இதுவும் ஒருவகைல நல்லதுதானே...’’ என்றார் சிரித்துக்கொண்டே!

‘’நான் கஷ்டப்பட்டது வேற. நீ போராடுறதுங்கறது வேற. அப்போ எனக்கு என்னன்னா... எங்கிட்ட மைனஸ்னா... எதுவுமே இல்லேங்கறதுதான். அதான் மைனஸா இருந்துச்சு. ப்ளஸ்னு பாத்தா, நம்பிக்கைதான் எனக்கு ப்ளஸ்ஸா இருந்துச்சு. உனக்கு மைனஸ் அப்பாதான். நான்தான். ஏன்னா... பாக்யராஜ் பையன்ங்கறதே மைனஸாயிருச்சு. நிறைய பேர், கதை சொல்ல வர்றதுக்கே யோசிப்பாங்க... ஒருவேளை அவங்க அப்பா பாக்யராஜ் கதை கேக்க வந்துருவாரோன்னு யோசிப்பாங்க. அதுமட்டுமில்லாம, நான் ஏதாவது பேசினாலே... ‘அவரு எப்போ கதையைக் கேட்டு, எப்போ ஓகே சொல்லி, என்ன சொல்லப் போறாரோ ஏது சொல்லப்போறாரோ’ன்னெல்லாம் அவங்களாவே முடிவுக்கு வந்துடுறாங்க. இதெல்லாம் உனக்கு மைனஸ்’’ என்றார் பாக்யராஜ்.
அதையடுத்து சாந்தனு... ‘’உங்களோட ‘தாவணிக்கனவுகள்’ படம் பாத்தேன். அதுல சினிமா பாக்கும்போது சில்லறைக்காசுகளை கீழே போட்டுத் தேடுற மாதிரி ஒரு சீன். இதெல்லாம் உங்க லைஃப்ல, உங்களுக்கே நடந்த விஷயமா?’’ என்று கேட்டார்.

‘’அப்படிலாம் இல்ல. ஒரு பிரதர் கேரக்டரோட சிந்தனை. சிஸ்டர்ஸை கூட்டிட்டுப் போற பிரதரோட மனநிலையை, அப்படியொரு காட்சியா, யோசிச்சு வைச்சேன். ‘இந்தப் படத்துல சில விஷயங்கள் இருக்கு. அதனால பசங்களைக் கூட்டிட்டுப் போகக்கூடாது’ன்னு சொல்லுவாங்கதானே. அப்படி யோசிச்சு அந்த சீன் வைச்சேன். ஒவ்வொண்ணையும் ரியல் லைஃப்ல அனுபவிச்சிருக்கணும்னு இருந்தா... எனக்கு தங்கச்சியே கிடையாதே. என்ன பண்ணமுடியும்?’’என்றார் பாக்யராஜ்.

’சரி... நீங்க பாட்டு கம்போஸ் பண்ணிருக்கீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். மியூசிக் பண்ணிருக்கீங்க. இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு நீங்க மியூஸிக் பண்ணிருக்கீங்கன்னே தெரியாது. ஆனா, உங்க பாட்டெல்லாம் கேட்டிருப்பாங்க. பிடிச்சிருக்கும். ஆனா நீங்க பண்ணினதுன்னு தெரியல. அது எல்லாருக்கும் தெரியணும். அதனால, நீங்க கம்போஸ் பண்ணின பாடல்கள்ல, ரெண்டு மூணு பாடல்கள்..’’ என்று கேட்டார் சாந்தனு. அத்துடன் ஆர்மோனியத்தைக் கொண்டுவந்து பாக்யராஜ் எதிரே வைத்தார்.

‘’அதாவது, இது (ஆர்மோனியம்) வாங்கினது, கத்துக்கறதுக்காகத்தான். ஆரோகணம், அவரோகணம் சொல்லிக்கொடுத்தாங்க. என்னோட இங்கிலீஷ் மாஸ்டர் சுதாகர் சார்தான், மியூஸிக்கிற்கும் எனக்கு மாஸ்டர். எனக்கு டியூன்ஸ் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்லி, ‘ஹம்’ பண்ணிக் காட்டினேன். சரணத்துக்குப் போகச் சொன்னாங்க. போனேன். நல்லாருக்கேனு சொன்னாங்க.

அப்புறம் அப்ப, ‘எங்க சின்னராசா’ல சங்கர்கணேஷ்கிட்ட சொல்ல, அவர் நல்லாருக்குன்னு சொன்னார். எம்.எஸ்.வி.அண்ணன்கிட்ட சொல்ல, ‘தம்பி, நல்லாருக்கு தம்பி’ன்னு சொன்னார். ஆனாலும் எனக்கு இந்த ஆர்மோனியத்துல ஆரோகணம் அவரோகணம்னு கத்துக்கிட்டதோட சரி. ‘அந்த 7 நாட்கள்’ படத்துல ‘எனக்கும்... எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்’னு ஆர்மோனியம் வாசிச்சது, அந்தக் காட்சிக்காக. தவிர, வஸந்தி இருக்கணும், கோபி இருக்கணும்’’ என்று பாக்யராஜ் சொல்ல, ‘நம்ம வீட்ல வசந்தி இருக்காங்க. அவங்க பேரு பூர்ணிமா. அவங்களை வேணா கூப்பிடலாமா?’ என்று சாந்தனு சொல்ல, ‘அவங்க வயசானவங்களாச்சே...’ என்று கிண்டல் செய்தார் பாக்யராஜ்.

பிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தின் ‘பச்சைமலை சாமி ஒண்ணு’ பாடலைப் பாடிக் காட்டினார். கூடவே சாந்தனுவும் பாடினார்.

‘’நான் ஆளான தாமரை’க்கு ஒரு விஷயம் சொல்லணும். ‘எங்க சின்னராசா’வுல சங்கர்கணேஷ் கூட ஒர்க் பண்ணிட்டிருந்தப்போ, படத்துல ராதா என்னை வம்பு பண்ணி மசிய வைக்கிற மாதிரி ஒரு சீன். அப்போ இந்த டியூனைப் போட்டா நல்லாருக்குமான்னு ‘ஹம்’பண்ணிக் காட்டினேன். நல்லாருக்குமேனு அந்தப் படத்துல சின்னதா அந்த டியூனைப் போட்டார். அப்புறமா ‘இதுநம்ம ஆளு’ படத்துல அந்த டியூனை டெவலப் பண்ணி பாட்டாக்கினேன்’’ என்று சொல்லிவிட்டு, ‘நான் ஆளான தாமரை’ பாடலை பாடிக் காட்டினார் பாக்யராஜ்.

அதேபோல், ‘மெலடிப் பாட்டு. ‘அம்மாடி இதுதான் காதலா... அடராமா... இது என்ன வேதமா.’ பாட்டும் சரி, ‘ஆளான தாமரை’ பாட்டும் சரி, இவ்ளோ பெரிய ஹிட்டாகும்னெல்லாம் நான் நினைக்கவே இல்ல’’ என்று மனம் திறந்து தெரிவித்தார் பாக்யராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்