விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்: மலைக்கவைக்கும் உயரத்தை எட்டியது எப்படி?

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

1992-ல் வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் கதாநாயக நடிகராக அறிமுகமான விஜய் அதற்குப் பிறகு படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்கிறார். 1990-களின் பிற்பகுதியில் சில முக்கியமான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக நிலைபெற்றுவிட்டார். அடுத்த பத்தாண்டுகளில் 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி', 'போக்கிரி' போன்ற படங்களின் மூலம் மாஸ் ஆக்‌ஷன் நாயகனானார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் விஜய்யின் திரை வாழ்வும் அவர் நடிக்கும் படங்களும் அந்தப் படங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் ஒட்டுமொத்த மதிப்பும் ஒரு நடிகராக விஜய்யின் வீச்சும் ரசிகர்களின் எண்ணிக்கையும் மாபெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின.

விஜய் ஃபார்முலா என்று சொல்லப்பட்டுவந்த வகையைச் சேர்ந்த படங்களிலிருந்து மாறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய பல படங்களில் நடித்தார். தற்போது விஜய்யின் வெற்றி ஃபார்முலாவுக்கு ஒரு புது இலக்கணம் உருவாகியிருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் என்ற வரையறையைத் தாண்டி பொதுப் பார்வையாளர்களின் விஜய் மீதான மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இளைய தளபதி என்று அழைக்கப்பட்ட விஜய் தளபதியாக மாறிய இந்தக் காலகட்டத்தில் விஜய் மீதான பொதுவான பார்வையே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. 2010-2020 காலகட்டத்தில் அவர் நடித்த சில முக்கியமான படங்களே இதற்குக் காரணமாக அமைந்தன.

கண்ணியமான காதலன்

2011-ல் வெளியான 'காவலன்' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு அழகான அமைதியான காதலனாக நடித்தார். அந்தப் படத்தில் காதலுக்கும் விஜய்யின் நடிப்புத் திறமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. விஜய் மிக கண்ணியமான காதலனாக மென்மையான மனிதராக அவ்வளவு அழகாக இருந்தார். நன்றாக நடித்திருந்தார். மாஸ் படங்களில் நடித்தபடி டாப் கியரில் சென்றுகொண்டிருந்த விஜய் திடீரென்று மலர்களின் வாசம் நிரம்பிய பூங்காவில் நுழைந்தது போன்ற உணர்வைக் கொடுத்தது 'காவலன்'. இந்த வரவேற்கத்தக்க மாற்றத்துக்கு ரசிகர்களும் வெற்றியைப் பரிசளித்தனர்.

பேரறிவுகொண்ட மாணவன்

அடுத்ததாகப் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் கரம் கோத்தார் விஜய். இந்தியில் வெற்றிபெற்ற 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் இந்தியில் ஆமீர் கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். இந்த ஒப்பந்தம் உறுதியாகும்வரை இப்படி ஒன்று நடக்கும் என்று யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். 'முதல்வன்' படத்திலேயே விஜய் நடித்திருக்க வேண்டியது. அப்போது தள்ளிப்போன ஷங்கர்-விஜய் கூட்டணி இருவருமே மேலும் பல உயரங்களை எட்டிய பிறகு சாத்தியமானது. படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் ஷங்கர், விஜய் இருவருமே தம்முடைய இமேஜுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் கதையையும் செய்தியையும் அப்படியே கடத்தும் வகையில் 'நண்பன்' படத்தை அளித்தனர். அசாத்திய அறிவும் திறமையும் அன்பும் விளையாட்டுத்தனமும் கொண்ட கல்லூரி மாணவராக விஜய் மிகக் கச்சிதமாகப் பொருந்தினார். அந்தப் படத்தில் நடித்தபோது அவருக்கு 38 வயது. ஆனால் கல்லூரி மாணவராக அவரை ஏற்றுக்கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அன்பாலும் அறிவாலும் நண்பர்களை வழிநடத்துபவராக விஜய்யைப் பார்ப்பது அனைவருக்கும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஸ்டைலிஷான ராணுவ வீரன்

ஷங்கருக்கு அடுத்து அவரைப் போலவே சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் படங்களுக்காகப் புகழ்பெற்ற இன்னொரு இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோத்தார் விஜய். அவர்களுடைய முதல் படமான ‘துப்பாக்கி’ தீவிரவாதத்துக்கு எதிரான படம். இந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார் விஜய். ஸ்டைலிஷான உடைகள், நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி என முற்றிலும் புதிய விஜய்யை இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. ஹேர் ஸ்டைல், மீசை ஆகியவற்றில் கூட மாற்றங்கள் இருந்தன. இதைத் தாண்டி இந்தப் படத்தில் விஜய்யின் சின்ன சின்ன ஸ்டைலான மேனரிஸங்களும் அவ்வளவு அழகாக இருந்தன. அதேநேரம் காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட், தேசப்பற்று சார்ந்த உணர்ச்சிகரமான வசனங்கள் ஆகியவற்றிலும் விஜய் அசத்தலாக ஸ்கோர் செய்திருந்தார். படமும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

போராடும் எளியவன், சாதித்துக்காட்டும் இளைஞன்

முருகதாஸுடன் விஜய் மீண்டும் இணைந்த 'கத்தி' படத்தில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் பொறுப்பற்றுத் திரியும் கதிரேசனாகவும் ஒருகிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடும் ஜீவானந்தமாகவும் அவ்வளவு இருவேறு கதாபாத்திரங்களில் பெரும் வித்தியாசம் காட்டி நடித்திருந்தார் விஜய். ஜீவானந்தமாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தார். கார்ப்பரேட் நிறுவனங்களின் துரோகத்தைக் கண்டு கதறி அழும் காட்சியில் ஒரு எளிய மனிதனின் கையறு நிலையை அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தினார். அதேநேரம் கதிரேசனாக மாஸ் காட்சிகளிலும் விருந்து படைத்தார். 24 மணி நேர செய்தி சேனல்களின் வியாபார நோக்கைத் தோலுரிக்கும் அந்த நீண்ட பிரஸ் மீட் காட்சி விஜய்யின் திரைவாழ்வில் மிக முக்கியமான காட்சி என்று சொல்லலாம். பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் மூலம் விஜய் படங்களில் முக்கிய சமூகப் பிரச்சினைகள் பேசுபொருளாகும் போக்கு தொடர்ந்தது.

மிடுக்கான காவலன், பாசக்கார தந்தை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அட்லி இயக்கிய 'தெறி' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜய். காவல்துறை சீருடையில் காவலர்களுக்கு ஏற்ற மிடுக்கான உடல்வாகு, பார்வை, உடல்மொழி என அனைத்து வகையிலும் ரசிக்கும்படி இருந்தார். காவல்துறை அதிகாரியாக மாஸ் காட்சிகளில் மட்டுமல்லாமல் அழகான காதலனாக, அன்பான மகனாக., நேசத்துக்குரிய கணவனாக, பாசக்கார தந்தையாக பல பரிமாணங்களில் சிறப்பாக நடித்து அனைத்து வயது ரசிகர்களையும் ஈர்த்தார். இந்தப் படத்தின் வெற்றி விஜய்யின் திரை வாழ்வில் மற்றொரு திருப்புமுனை. விஜய்க்கு இருக்கும் 'ஃபேமிலி ஹீரோ' இமேஜ் மிகவும் வலுவடைந்தது இந்தப் படத்தின் மூலமாகத்தான்.

மூன்று முகங்கள்

அட்லியுடன் மீண்டும் இணைந்த 'மெர்சல்' படத்தில் தந்தை, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்தார் விஜய். மரியாதைக்குரிய கிராமத்து வீரன், சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர், மேஜிக் கலை நிபுணர் என மூன்று கதாபாத்திரங்களிலும் கெட் அப், உடல்மொழி எனப் பலவகைகளில் வேறுபாடு காட்டியிருந்தார். மூன்று கதாபாத்திரங்களிலும் அவருடைய கெட்-அப்பும் தோற்றமும் ரசிக்கும்படி இருந்தன. ஜனரஞ்சக அம்சங்கள் நிரம்பிய மாஸ் மசாலா படம்தான் என்றாலும் இதில் ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்ற விஷயங்களைத் துணிச்சலாக விமர்சித்திருந்ததால் அரசியல் வாதிகள் சிலரின் எதிர்ப்பைப் பெற்றது இந்தப் படம். இதன் மூலம் விஜய் படங்களுக்கு அரசியல் ரீதியான மதிப்பு கொடுக்கப்படத் தொடங்கியது.

அடுத்ததாக முருகதாஸின் 'சர்கார்' படத்தில் அரசியல் நெடி தூக்கலாக இருந்தது. தமிழகத்தில் தேர்தலில் பங்கேற்று அரசியல் மாற்றத்தை விளைவிப்பவராக நடித்திருந்தார் விஜய். அட்லியின் ‘பிகில்’ படத்தில் பெண்களின் கால்பந்தாட்ட அணியை முன்வைத்து எடுக்கப்பட்டிருந்தது, இதில் விளையாட்டில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு உள்ள தடைகள், அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் இருந்ததால் அந்தப் படம் பெண்களைப் பெரிய அளவில் கவர்ந்து வெற்றிபெற்றது.

இப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய். 'மாஸ்டர்' உட்பட அவருடைய வருங்காலப் படங்கள் அனைத்தும் விஜய் மீதான ரசிகர்களின் அன்பையும் மரியாதையையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE