தீவிரமடையும் விசாரணை: சுஷாந்த் - யாஷ்ராஜ் பிலிம்ஸ் ஒப்பந்த ஆவணங்கள் போலீஸிடம் ஒப்படைப்பு

By பிடிஐ

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் தற்கொலை சம்பவத்தை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிர்வாகத்துக்கு சுஷாந்துடனான ஒப்பந்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு பாந்த்ரா காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் - சுஷாந்த் இடையிலான ஒப்பந்த ஆவணங்களின் நகலை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிர்வாகத்தினர் காவலதுறையிடம் ஒப்படைத்துள்ளதாக காவல் ஆணையர் அபிஷேக் திரிமுகே தெரிவித்துள்ளார்.

இதுதவிர சுஷாந்தின் குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள், சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் அவர்கள் அளித்த தகவல்களில் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அபிஷேக் திரிமுகே கூறியுள்ளார்.

விசாரணையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடனான சுஷாந்தின் ஒப்பந்தங்கள் முடிவு வந்துவிட்டதாகவும், இனி யாஷ் ராஜ் பிலிம்ஸ் படங்களில் தன்னையும் நடிக்கவேண்டாம் என்று சுஷாந்த் தன்னிடம் கூறியதாக ரியா கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE