ஏழு முறை நிராகரிக்கப்பட்ட பிறகு உருவான ‘சக் தே இந்தியா’ பாடல்: இசையமைப்பாளர் சலீம் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

தேசபக்தி மிக்க பாடல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘சக் தே இந்தியா’ டைட்டில் பாடல் ஏழு முறை நிராகரிக்கப்பட்டதாக இசையமைப்பாளர்கள் சலீம் - சுலைமான் ஜோடியில் ஒருவரான சலீம் மெர்சண்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சலீம் மெர்சண்ட் கூறியுள்ளதாவது:

'' ‘சக் தே இந்தியா’ படத்துக்காக நாங்கள் இசையமைக்கத் தொடங்கியபோது தேசபக்திமிக்க ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம். படத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியதாக அப்பாடல் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா இந்தப் பாடல் போரடிப்பதாக உள்ளது என்று கூறிவிட்டார். உற்சாகமான ஒரு பாடலை உருவாக்குமாறு எங்களிடம் அவர் கூறினார். எனவே, அவ்வாறான ஒரு பாடலை உருவாக்கினோம். ஆனால், அதில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை. எங்களுக்கு அது பிடிக்காமல் நிராகரித்தோம். இது ஏழு முறை நடந்தது.

ஏழு பாடல்களை நிராகரித்த பிறகு நான் சுலைமானிடம் ‘ஏழு முறை என்பது மிக அதிகம். பேசாமல் நாம் இப்படத்திலிருந்து விலகி விடுவோம்’ என்றேன். பின்னர் ஒருநாள் என்னிடம் ஆதித்யா சோப்ரா ‘சலீம், ‘ஜும்மா சும்மா’ பாடலை எப்போதாவது கேட்டதுண்டா?’ என்று கேட்டார். நான் ஆம் என்றதும் அந்தப் பாடலின் மெட்டிலேயே ‘சக் தே இந்தியா’ வரிகளை பாடத் தொடங்கினார். பாடி முடித்ததும் ‘எனக்கு ‘ஜும்மா சும்மா’ பாடல் வேண்டாம். ஆனால், அதே உற்சாகமும் கொண்டாட்டமும் வேண்டும் என்று கூறினார். இப்படித்தான் ‘சக் தே இந்தியா’ பாடல் உருவானது''.

இவ்வாறு சலீம் கூறியுள்ளார்.

ஷாரூக் கான் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சக் தே இந்தியா’. பெண்கள் ஹாக்கி அணியையும் அவர்களின் பயிற்சியாளரையும் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE