ஆர்ஜே பாலாஜி பிறந்த நாள் ஸ்பெஷல்: ரசனைக்குரிய நகைச்சுவையும் மதிப்புக்குரிய சமூக அக்கறையும்!

வேறு துறைகளில் சாதித்துவிட்டு தமிழ் சினிமாவிலும் சாதித்தவர்கள் பட்டியலில் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கான முன்னோடி உதாரணமாகத் திகழ்பவரான ஆர்ஜே பாலாஜிக்கு இன்று (ஜூன் 20) பிறந்த நாள். வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தபோது தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தைத் திரட்டியவர். தமிழ் சினிமாவில் நுழைந்து நகைச்சுவை, குணச்சித்திரம், நாயகன் என ஒரு நடிகராகப் படிப்படியாக உயர்ந்து இப்போது 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதிக்கத் தயாராகிவருகிறார்.

திறமையும் உழைப்பும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் சமூக அக்கறையுடன் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு துணிச்சலாகக் குரலெழுப்புவதிலும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க களம் இறங்கிச் செயல்படுவதிலும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் திரைத் துறை பிரபலங்களுக்கும் முன்னோடியாக இருப்பவர் பாலாஜி.

அசல் சென்னைப் பையன்

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. சென்னையின் மூலை முடுக்கு இண்டு இடுக்கெல்லாம் கரைத்துக் குடித்த அசலான சென்னைப் பையன். செல்வாக்கு பெற்றவர்களின் எந்தத் தொடர்பும் இல்லாத சாதாரண குடும்பத்துப் பையனான பாலாஜி தனது பேச்சுத் திறமையை நம்பி வானொலித் தொகுப்பாளராக (ஆர்ஜே) தொழில் வாழ்வைத் தொடங்கினார். அப்போது பல தனியார் எஃப்எம் சேனல்கள் அதிகரித்திருந்தன. கையடக்க மொபைல் போனிலேயே எஃப்.எம். கேட்கும் வசதியும் பெருகியதால் எஃப்.எம் சேனல்களைக் கேட்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்தது. இந்தத் தொடக்கக் காலகட்டத்தில் பாலாஜி போன்ற திறமையான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அவற்றால் தாமும் பிரபலமடைந்ததோடு தங்களுக்கு வேலை கொடுத்த எஃப்.எம் சேனல்களையும் பிரபலப்படுத்தினார்கள்.

அசத்தல் ஆர்ஜே

சென்னையில் ஒரு பிரபலமான எஃப்.எம். சேனலில் பாலாஜி தினமும் நடத்திய 'டேக் இட் ஈஸி' என்னும் நான்கு மணி நேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கென்று ஒரு தனி ரசிகர் படை உருவானது. பிராங்க் கால், திரை விமர்சனம், அன்றாட நிகழ்வுகள் குறித்த ஜாலியான உரையாடல் என இந்த நிகழ்ச்சி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் அமைந்திருந்தது. பாலாஜியின் சுவாரஸ்யமான நகைச்சுவையும் பகடியும் கலந்த பேச்சு நடை அவர் உருவாக்கிய புதுப்புது வார்த்தைகளும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவருக்கென்று ஒரு கூட்டம் உருவானது. ஆர்ஜே என்னும் அடையாளமே பெயரின் முன்னொட்டாகி ஆர்ஜே பாலாஜி என்னும் பெயரும் அவருடைய நிகழ்ச்சியும் இளைஞர்களின் அன்றாட உரையாடல்களில் இடம்பெறத் தொடங்கியது.

'தீ'யான அறிமுகம்

எஃப்எம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாஜி சுந்தர்.சி, இயக்கிய 'தீயா வேல செய்யணும் குமாரு' படத்தில் துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2013-ல் வெளியான அந்தப் படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன் பாணியிலான வசன நகைச்சுவையில் ரசிகர்களைச் சிரிக்க வைத்து கவனம் ஈர்த்தார். அடுத்தடுத்த சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும் 2015-ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடிதான்' படம்தான் நடிகராக ஆர்ஜே பாலாஜிக்கு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக அவருடைய நடிப்பும் வசனங்களும் படத்தின் நகைச்சுவை உள்ளடக்கத்துக்குக் கலகலப்புக்கும் வலுசேர்த்தன. படம் வெற்றி பெற்றது. ஆர்ஜே பாலாஜி பெரிதும் விரும்பப்படும் முன்னணி நகைச்சுவைத் துணை நடிகரானார்.

நகைச்சுவையைத் தாண்டி

தொடர்ந்து பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார் பாலாஜி. நகைச்சுவையைத் தாண்டி கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பாலாஜி என்றாலே சிரிக்க வைப்பார் என்பதைத் தாண்டி இளைஞர்களின் சமூக ஆற்றாமையை அரசியல் பார்வையை வருங்காலம் குறித்த எதிர்பார்ப்புகளைத் திரையில் வெளிப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தார். சமூக-அரசியல் அவலங்கள் குறித்த பகடி அவருடைய தனி முத்திரை ஆனது. பகடி மட்டுமல்லாமல் முக்கியமான சமூகத்தில் அனைவரையும் சென்றடைய வேண்டிய நல்ல கருத்துகளையும் தன் வசனங்களின் வழியே பரப்பினார். மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்', மோகன்ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' என முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

நாயகனாக முதல் வெற்றி

கடந்த ஆண்டு வெளியான எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் படத்துக்குத் திரைக்கதை வசனத்தை எழுதினார். ஆர்ஜே பாலாஜி. சமகால அரசியல் நிகழ்வுகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் சகல தந்திரங்களையும் செய்து அரசியலில் படிப்படியாக முன்னேறி மாநிலத்தின் முதல்வராகும் இளைஞனாக சிறப்பாக நடித்திருந்தார் பாலாஜி. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது.

இயக்குநர் பாலாஜி

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தை என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கிவரும் பாலாஜி அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்தப் படம் வெளியான பிறகு ஒரு நடிகராக வேறோரு தளத்துக்கு உயர்வதோடு ஒரு இயக்குநராகவும் அழுத்தமான தடம் பதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இதைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ஆகியோர் நடிப்பில் வளர்ந்துவரும் 'இந்தியன் 2' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் பாலாஜி. குறுகிய காலத்தில் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், சுந்தர்.சி. என முக்கியமான பல இயக்குநர்களின் படங்களில் நடித்துவிட்டார். இதிலிருந்தே ஒரு நடிகராக பாலாஜி அடைந்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

சினிமாவில் நடிப்பதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பொது நிகழ்ச்சிகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்குதல், கிரிக்கெட் வர்ணனை எனப் பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார் பாலாஜி. அந்த வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் சாதிப்பதற்கும் ஒரே நேரத்தில் பல துறைகளில் இயங்குவதற்கும் இளைஞர்களை உந்து சக்தியாகத் திகழ்கிறார்.

ஊக்கம் மிக்க சமூகப் பணிகள்

இவை எல்லாவற்றையும்விட சமூக நலப் பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். 2015இல் பெருவெள்ளம் சென்னையைச் சூறையாடியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகக் களத்தில் முன்னணியில் நின்ற மிகச் சில பிரபலங்களில் ஆர்ஜே பாலாஜி முக்கியமானவர். 2017இல் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கெதிரான வரலாறு காணாத மக்கள் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். பல அரசியல் சமூக நிகழ்வுகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரலெழுப்பி வருகிறார்.

சாதிப்பதில் மட்டுமல்லாமல் சமூக அக்கறையிலும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் ஆர்.ஜே.பாலாஜி இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும் பொதுநல விவகாரங்களில் தொடர்ந்து ஊக்கத்துடன் செயலாற்றவும் அவருடைய இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE