சுஷாந்தின் மரணத்துக்கு கரண் ஜோஹரைப் பழிசொல்வது அபத்தம்: ராம்கோபால் வர்மா ஆதரவு

By செய்திப்பிரிவு

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துக்கு கரண் ஜோஹரைக் காரணம் காட்டுவது அபத்தமானது என்றும், அப்படிச் சொல்பவர்களுக்கு பாலிவுட் எப்படி இயங்குகிறது என்பதே தெரியவில்லை என்றும் இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை ஏற்கெனவே துறையில் சாதித்தவர்கள் தவறாக நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது நிறுவனமும் சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கியதாகவும் ஒருதரப்பு குற்றம் சாட்டி வருகிறது.

தற்போது கரண் ஜோஹருக்கு ஆதரவாக ராம்கோபால் வர்மா குரல் கொடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அடுத்தடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்திருந்த ராம்கோபால் வர்மா, கரண் ஜோஹரைக் குற்றம் சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்களில் கூறியிருப்பதாவது:

"முலாயம் சிங் யாதவ், உத்தவ் தாக்கரே போன்றவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும்தான் முதல் முக்கியத்துவம் தருவார்கள். திருபாய் அம்பானி தனது மகன்கள் முகேஷ் மற்றும் அனிலுக்குதான் மொத்தப் பணத்தையும் தருவார். எல்லாக் குடும்பங்களுமே அவர்களின் குடும்பங்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம் தருவார்கள். அதுபோலத்தான் பாலிவுட் குடும்பங்களும் செய்கின்றன. எனவே வாரிசு அரசியல் இல்லாத இடம் எது?

நடந்ததற்கு கரண் ஜோஹரைப் பழி சொல்வது அபத்தமானது. திரைத்துறை எப்படி வேலை செய்கிறது என்பது புரியாமலேயே பழிபோடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. கரணுக்கு சுஷாந்துடன் பிரச்சினை இருந்தது என்றே வைத்துக்கொண்டாலும் கூட, எப்படி எந்த இயக்குநரும் அவருக்குப் பிடித்தவர்களுடன் பணியாற்றுகிறார்களோ அதுபோல கரண் யாருடன் பணியாற்ற வேண்டும் என்பது அவர் முடிவு செய்ய வேண்டியதுதான்.

தன்னை வெளியால் போல நடத்தினார்கள் என்பதற்காக 12 வருடங்கள் புகழும் பணமும் சம்பாதித்த பின்னும் கூட சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்றால் சுஷாந்த் நிலைக்குப் பக்கத்தில் கூட போக முடியாத நடிகர்கள் 100 பேர் தினமும் அந்த வகையில் தற்கொலை செய்து கொள்ளலாம். அதை நியாயப்படுத்தலாம். உங்களிடம் இருக்கும் விஷயங்களை வைத்து உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்றால் உங்களுக்குக் கிடைக்கப் போகும் விஷயங்களை வைத்தும் உங்களால் என்றும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

அமிதாப் பச்சனிலிருந்து ஆரம்பித்து இன்று பாலிவுட்டில் இருக்கும் பலரும் ஒரு காலத்தில் வெளியிலிருந்து வந்தவர்கள்தான். கரண் ஜோஹர் உச்சத்தில் இருப்பதற்குக் காரணம் அவர் துறைக்குள்ளேயே இருக்கிறார், வாரிசு என்பதனால் அல்ல. அவரது படங்கள் பல லட்சம் மக்களால் பார்க்கப்படுகிறது என்பதால். வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கிடைக்கும் தோல்விகளுக்குச் சமமாகத் திரைக் குடும்பங்களும் தோல்வி அடைகின்றன என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

எவ்வளவு பேர் திட்டம் போட்டு சுஷாந்தை விரட்ட வேண்டும் என்று நினைத்திருந்தாலும் சரி (அது என்ன காரணம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை) பலர் சுஷாந்துடன் இணைந்து பணிபுரியக் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களுடன் பணிபுரிய சுஷாந்த் எப்படி விரும்பவில்லையோ அதேபோல சுஷாந்துடன் பணிபுரிய விரும்பாதது அவரவர் விருப்பம்.

பாலிவுட் ஒரு கடினமான இடம். ஏனென்றால் இங்கு எம்பிக் குதித்து நட்சத்திரத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எவ்வளவு உயரம் குதிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் விழும்போது கடுமையாக இருக்கும். சுஷாந்த் குறைந்தது நிலவைத் தொட்டுவிட்டார். ஆனால் தரையிலேயே இருக்கும் இன்னும் பல நூறு பேரின் கதி என்ன. அவர்களும் உலகத்தைப் பழி சுமத்திவிட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா?

ஒரு சிறந்த திறமைசாலி ஒதுக்கப்பட்டுவிட்டார் என்று சமூக ஊடகங்களில் கூச்சலிட்டாலும், உண்மை என்னவென்றால், மக்கள் தான் சுஷாந்தை விட மற்ற நடிகர்களை (அவர்கள் படங்களை) அதிகமாகப் பார்க்கிறார்கள். அதற்காக கரண் ஜோஹர், ரசிகர்களின் நெற்றியில் துப்பாக்கி வைக்க முடியாது.

சுஷாந்த் தாக்குப் பிடித்திருந்தால் அடுத்த 15-20 வருடங்களில் அவர் பாலிவுட்டைச் சேர்ந்தவராக இருந்திருப்பார். அவர் தனது மகனை அறிமுகப்படுத்தும்போது, இப்போது எல்லோரும் கரண் ஜோஹரைப் பழி சொல்வது போல, அப்போது பிரஷாந்த் என்று யாராவது ஒருவர் வெளியிலிருந்து கொண்டு சுஷாந்தைப் பழி சொல்லியிருப்பார்.

இங்கு உள்ளே இருப்பவர்கள், வெளியே இருப்பவர்கள் என்று எதுவும் கிடையாது. தங்களுக்கு யாரைப் பிடிக்கும், பிடிக்காது என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்கிறார்கள். திரைக் குடும்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவர்களுக்கு ரசிகர்களின் விருப்பு வெறுப்பை மாற்றும் சக்தி கிடையாது. மேலும் கரண் ஜோஹர் பெரிதாக வளர்ந்ததற்கு மக்கள்தான் காரணம், அவர் அல்ல என்பதை மறக்க வேண்டாம்.

கரண் ஜோஹரின் வெற்றியைப் பிடிக்காதவர்கள், சுஷாந்தின் இந்த மரணத்தைப் பயன்படுத்தி கரண் ஜோஹர் மீதான பொறாமையை, ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்மறையாகப் பேச ஆரம்பித்தால் அது ஒரு நகைச்சுவையே. ஏனென்றால் ஒட்டுமொத்த சமூகமுமே குடும்பத்தை விரும்புவதன் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஷாரூக் கான் தனது மகன் ஆர்யனுக்குப் பதிலாக அதிக திறமை இருக்கும் இன்னொருவரை அறிமுகம் செய்ய வேண்டுமா? (யாருடைய பார்வையில் அந்தத் திறமை மதிப்பிடப்படுகிறது?)

கரண் ஜோஹரை வெறுக்கும் இணையப் போராளிகள் தங்கள் குடும்பம், நண்பர்களைத் தாண்டி வேறொருவருக்கு வாய்ப்ப்யு தருவார்களா? நம் சொந்தங்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அக்கறை செலுத்துவது அடிப்படை மனித இயல்பு.

மிகச் சிறந்த திறமைசாலி ஒடுக்கப்பட்டுவிட்டார் என்று கதறுபவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். 48 மணி நேரங்களுக்கு முன்பு வரை (சுஷாந்தின் இறப்புக்கு முன்பு வரை) ஏன் அதற்கு முன் பல மாதங்களாகக் கூட, இன்று சுஷாந்தை ஒதுக்கிவிட்டார் என்று கரண் ஜோஹரை குற்றம் சாட்டும் லட்சக்கணக்கானவரக்ளிடமிருந்து திரையில் சுஷாந்தைப் பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன கருத்து கூட சமூக ஊடகத்தில் வரவில்லை.

திறமையை மட்டுமே வைத்து தனியாக, முழுமையாக எடை போட முடியாது. அந்தந்த தனிப்பட்ட நபர், விமர்சகர்கள், வசூல் உள்ளிட்ட விஷயங்களை வைத்துதான் திறமை மதிப்பிடப்படுகிறது. அதற்கு அத்தாட்சி, இரண்டு நாட்கள் முன்பு வரை, ஏன் சுஷாந்த் ரன்வீர், ரன்பீரை விட பெரிதாக வளரவில்லை என்பது குறித்து சமூக ஊடகங்களில் யாரும் கதறவில்லை.

வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற தன்மை இல்லையென்றால் சமூகம் உடைந்துவிடும். ஏனென்றால் குடும்பத்தின் மீதான அன்பு தான் சமூகக் கட்டமைப்பில் அடிப்படை சித்தாந்தம். மற்றவர்களின் மனைவியையோ, குழந்தையையோ நீங்கள் அதிகமாக விரும்பக்கூடாது என்பதைப் போல.

இதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, திடீரென கண்டுபிடிக்கப்பட்ட பலியாள் சுஷாந்தை விட அறியாமையில் தாக்கும் சமூக ஊடகக் கும்பலின் கைகளில் கரண் ஜோஹர் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனது ஊகம் என்னவென்றால், இந்தப் போலியான புயல் ஓய்ந்த பின், எல்லா இடத்திலிருந்து வரும் வெளியாட்கள் பலரும் தொடர்ந்து கரண் ஜோஹரின் அலுவலகம் முன்பு வரிசை கட்டி நிற்பார்கள். ஏனென்றால் சமூக ஊடகப் போராளிகளால் வேலைவாய்ப்பு தர முடியாது, கரண் ஜோஹரால் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்".

இவ்வாறு ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE