தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் சாதித்தவர்களில் ஒருவர் மணிவண்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 50 படங்களை இயக்கியவர். 90களில் அவர் நிறைய நடித்துக்கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய இளைஞர்கள் பலர் இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் அவருடைய சாதனைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.
எழுத்தாளராக முதல் வெற்றி
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்தவரான மணிவண்ணன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 'நிழல்கள்' படத்தின் மூலம் பாரதிராஜாவால் கதை - வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கும் மணிவண்ணனே கதை வசனம் எழுதினார். சாதி,மதம் தாண்டிய காதலைப் போற்றிய அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்துக்கும் மனோபாலா இயக்கிய 'ஆகாய கங்கை' படத்துக்கும் கதை, வசனம் எழுதினார் மணிவண்ணன்.
சட்டகத்துக்குள் சிக்காத இயக்குநர்
» 'கரோனா கஷ்டத்தில் ஒரு சிறிய புன்னகை!'- பாவனாவின் 4-வது மாஷ்அப் வீடியோ
» எனது 45 வருட நண்பர்களை கோவிட்-19 எடுத்துக்கொண்டது: பியர்ஸ் ப்ராஸ்னன் வருத்தம்
மோகன், சுஹாசினி, ராதா நடித்திருந்த 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குநராக முதல் தடம் பதித்தார் மணிவண்ணன். ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப் படத்துக்கு அவர் கதை எழுதவில்லை. கலைமணி கதை எழுதி தயாரித்த படம் இது. '24 மணி நேரம்', 'நூறாவது நாள்' போன்ற பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கி புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். 'பாலைவன ரோஜாக்கள்' போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பேசிய படங்களையும் 'சின்னதம்பி பெரியதம்பி' போன்ற ஜனரஞ்சகப் படங்களையும் இயக்கினார். தெலுங்கு, இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார் மணிவண்ணன். ஒரே வகைமைக்குள்ளோ சட்டகத்துக்குள்ளோ சிக்கிக்கொள்ளாத இயக்குநராக இருந்தார்.
ஆகச் சிறந்த அரசியல் நையாண்டி
ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான மணிவண்ணன் – சத்யராஜ் இடையிலான நட்பு திரையிலும் தொடர்ந்தது. இருவரும் இணைந்து பல மறக்க முடியாத படங்களைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் பல வகையான படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தாலும் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த அரசியல் நையாண்டிப் படமான 'அமைதிப்படை' இந்த இணையைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்த படமாக இருந்தது. திரைப்படங்களில் அரசியல் நையாண்டி என்ற வகைமைக்குப் புது இலக்கணம் படைத்தது. அந்தப் படத்தில் மணிவண்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார் என்பது அரசியல் நக்கல், நையாண்டிக்கு கூடுதல் சுவையைச் சேர்த்தது. 2013-ல் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜும் அவரும் இணைந்து நடித்த 'நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ' (அமைதிப்படை இரண்டாம் பாகம்) வெளியானது. அதுவே மணிவண்ணனின் கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.
வெற்றிகரமான நடிகர்
90-களிலிருந்து தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார் மணிவண்ணன். நகைச்சுவை, சென்டிமென்ட், வில்லத்தனமான நடிப்பு என அனைத்து வகையான நடிப்பிலும் கொடிநாட்டினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு, முரளி, விஜய், அஜித் போன்ற 90களின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நகைச்சுவை கலந்த வில்லனாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டியிருந்தார். 'அமைதிப்படை' வெற்றிக்குப் பிறகு 'தாய்மாமன்', 'வில்லாதி வில்லன்' போன்ற பல படங்களில் சத்யராஜ், கவுண்டமணியுடன் சேர்ந்து சமூக அரசியல் நையாண்டிக் காட்சிகளில் நடித்தார். 'முதல்வன்' படத்தில் முதல்வரின் பி.ஏ.வாக நடித்தது அவருடைய திரை வாழ்வில் இன்னொரு முக்கியமான படம்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'சங்கமம்' ஒரு நடிகராக மணிவண்ணனுக்கு மகுடம் சூட்டிய படம் எனலாம். அந்தப் படத்தில் கிராமப்புற கூத்துக் கலைஞராக அபாரமாக நடித்திருந்தார். தன் வளர்ப்பு மகன்களே கூத்துக் கலையை இழிவாகப் பேசுவதைக் கண்டு உணர்ச்சிவயப் பட்டு வெகுண்டெழும் காட்சியில் நடிப்பில் வி்ஸ்வரூபம் எடுத்திருப்பார். மணிவண்ணன் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய காட்சி அது.
வாழ்வின் இறுதிக் காலம் வரை தொடர்ந்து பல வகையான வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் மணிவண்ணன். அஜித்,விஜய், விக்ரம், சூர்யா. மாதவன், சிலம்பரசன், தனுஷ் என புத்தாயிரத்தில் உதித்த நட்சத்திரங்களுடனும் பல படங்களில் நடித்தார்.
அரசியல், சமூக விழிப்புணர்வு
சினிமாவில் தீவிரமாக இயங்கிக்கொண்டே அரசியல் இயக்கங்களிலும் பங்கேற்றுவந்தவர் மணிவண்ணன். தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தவர் பிறகு மார்க்சியம். தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு ஆகிய அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தார். வைகோவின் மதிமுகவுக்கு ஆதரவாகத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். இறுதியாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார். பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகக் கலை அம்சத்துடன் முற்போக்குக் கருத்துகளைக் கதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் பொருத்தினார். தான் எழுதிய, இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் நடிகராக நடித்த படங்களிலும் சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்களை முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவை வழியாக நுழைக்கும் திறமையும் சாதுரியமும் வாய்க்கப் பெற்றிருந்தார்.
ஒரு எழுத்தாளராகவும் இயக்குநராகவும் நடிகராகவும் சமூக அரசியல் இயக்கச் செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து தீவிரமாகவும் செயலூக்கத்துடனும் இயங்கிக்கொண்டிருந்த மணிவண்ணன் 2013 ஜூன் 15 உடல்நலக் கோளாறுகளின் விளைவாக மறைந்தார். அவர் மறைந்த பிறகும் அவருடைய திரைத்துறை சாதனைகள் எப்போதும் மறையாது, மறக்கவும் படாது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago