அவரைத் தெரிவதற்கு முன்பாகவே அவரின் கதைகளும் வசனங்களும் நமக்குப் பரிச்சயம். அந்தப் படத்தை முதன்முதலாகப் பார்க்கும்போது, அவருடைய கதை என்பதோ அவர்தான் வசனம் எழுதினார் என்பதோ தெரியாது. பின்னாளில் அவரைத் தெரியும் போது, இவையும் தெரிந்தன. ‘அட...’ என்று வியந்துதான் போனோம். அப்போது நம்மை வியப்புக்குள் ஆழ்த்தியவர் கடைசி வரைக்கும் வியக்கும்படியான கலைஞனாகவே திகழ்ந்தார். அவர்... நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன்.
பாரதிராஜாவுக்குக் கிடைத்த முதல் சிஷ்யன் பாக்யராஜ். அடுத்ததாகக் கிடைத்தவர் மணிவண்ணன். ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது மணிவண்ணனுக்குப் பொருந்தாது. முயற்சியும் உழைப்பும் இருக்கிற இடத்தில், கோணலும் இல்லை; மாணலும் கிடையாது. குருநாதர் பாரதிராஜாவுக்கு ‘நிழல்கள்’ கதையை எழுதிக் கொடுத்தார். ஆனால் படம் போகவில்லை. சொல்லப்போனால், தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை சந்தித்த பாரதிராஜாவுக்குக் கிடைத்த முதல் தோல்விப்படம் அதுதான்.
ஆனால், அடுத்த வாய்ப்பை வழங்கினார் பாரதிராஜா. இந்த முறை மணிவண்ணன் கதையும் வசனமும் கொண்டாடப்பட்டது. திரையிட்ட இடமெல்லாம் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அந்தப் படம்... ‘அலைகள் ஓய்வதில்லை’. இதையடுத்து, பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளியே வந்தார்.
‘’இந்தப் பையன் திறமைக்காரனா இருக்கான். நல்லாப் படம் பண்ணுவான்னு நம்பிக்கை இருக்கு. ஒரு சான்ஸ் கொடுங்க’’ என்று கதாசிரியரும் தயாரிப்பளாருமான கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. வாய்ப்பும் வழங்கப்பட்டது. அங்கே... ‘அலைகள் ஓய்வதில்லை’. இப்போது... ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்தவர்... இளையராஜா.
‘கோபுரங்கள் சாய்வதில்லை’ அறுக்காணியை மறக்கமுடியுமா? அநேகமாக, மோகனுக்கு ரெண்டு பொண்டாட்டி ஒர்க் அவுட்டானதன் தொடக்கம் அங்கிருந்துதான் என்பதாக நினைவு. மோகனும் நடிப்பில் பிரமாதப் படுத்தியிருந்தார்.
» பிழைப்பதற்கு சென்னை... வாழ்வதற்கு சொந்த ஊர்
» மலேசியாவின் குரல் தனி ரகம்; புது ஸ்டைல்; இன்று மலேசியா வாசுதேவன் பிறந்தநாள்
முதல் படத்தைப் போலவே எடுக்கிற டெம்ப்ளேட் இயக்குநராக தன்னை காட்டிக் கொள்வதில் விருப்பமில்லை மணிவண்ணனுக்கு. அதே மோகனை வைத்து, ‘இளமைக்காலங்கள்’ என்றொரு துள்ளத்துடிக்கிற காதல் கதையை எடுத்தார். ‘ஈரமானே ரோஜாவே’ பாடல்தான் அன்றைய காதலர்களின் தேசிய கீதம்.
மோகன், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோரைக் கொண்டு, ‘நூறாவது நாள்’என்று க்ரைம் திரில்லர் கொடுத்தார். இது அடைந்த வெற்றி, மணிவண்ணனை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. இதன் பிறகு அவர் எடுத்த படம், தமிழகத்தையே உலுக்கியது. ‘ஒரு படத்தைப் பாத்துட்டு, எவனாவது கொல்லுவானாய்யா? நல்லா கதை வுடுறாங்கய்யா’ என்று ஒருத்தர் கூட சொல்லவில்லை. ‘அப்படியாமே...’ என்று ஆச்சரியப்பட்டார்கள். ‘அப்படி என்னதாம்பா படத்துல இருக்கு. ரெண்டு தடவைப் பாத்தும் எனக்குத் தெரியலியே...’ என்று திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. படத்தின் பெயர்தான் ‘நூறாவது நாள்’. ஆனால் இருநூறு நாட்களைக் கடந்து ஓடியது. மோகன், நளினி, விஜயகாந்த், சில காட்சிகளில் வரும் மொட்டை சத்யராஜ், அந்த சிகப்புக் கலர் கோட்டு, கண்ணாடி, சர்ச்..., குதிரைப் படம் போட்ட அட்டைப்பட வாரப் பத்திரிகை என மிரட்டியெடுத்திருந்தார் மணிவண்ணன்.
‘24 மணி நேரம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’ என்று திரில்லர் படங்களாகவும் ‘இங்கேயும் ஒரு கங்கை’, ‘சின்னதம்பி பெரியதம்பி’ என்று காதல் படங்களாகவும் கொடுத்தார்.
கலைஞரின் கதை வசனத்தில் ‘பாலைவன ரோஜாக்கள்’ இயக்கினார். தன் நண்பர் சத்யராஜை தொடர்ந்து பயன்படுத்தினார். சத்யராஜுக்கென ஒரு பாடி லாங்வேஜையும் டயலாக் டெலிவரியையும் உருவாக்கினார். அந்த நக்கல்கிண்டலை ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
அடுத்தடுத்த வருடங்களெல்லாம் மணிவண்ணனுக்கு ஓய்வில்லாத வருடங்கள். கதையை யோசிப்பார். திரைக்கதையாக வளர்ப்பார். நடிகர்களைக் கூப்பிட்டுக்கொண்டு படப்பிடிப்புக்குப் போவார். படப்பிடிப்புத் தளத்தில், ஷூட்டிங்கிற்கான காட்சியை எடுப்பதற்கு முன்னதாக, பரபரவென எழுதுவார். எல்லாமே அந்தக் காட்சிக்கான வசனங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில், சுடச்சுட காட்சிகளுக்கு வசனம் எழுதுவதுதான் மணிவண்ணன் ஸ்டைல்.
ஏகப்பட்ட படங்கள். நிற்கவும் உட்காரவும் நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தார். குருநாதர் பாரதிராஜா, சிஷ்யன் பாக்யராஜை எப்படி நடிக்கவைத்தாரோ, அதேபோல, சிஷ்யன் மணிவண்ணனை ‘கொடி பறக்குது’ படத்தில் வில்லனாக்கினார்.
சத்யராஜ் எனும் வைரம். மணிவண்ணன் கையில் கிடைத்தது. இன்னும் இன்னுமாகப் பட்டை தீட்டப்பட்டது. ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறியேம்மா’ என்று சத்யராஜின் மாடுலேஷன் டயலாக் (24 மணி நேரம்) ஹிட்டடித்தது. அது மணிவண்ணன் ஸ்டைல் என்பதெல்லாம் பின்னாளில், மணிவண்ணன் நடிக்க வந்தபோதுதான் தெரிந்தது. கால்வாசி லொள்ளு, கால்வாசி ஜொள்ளு, கால்வாசி நக்கல், கால்வாசி நையாண்டி என கலவையாய் வந்து நின்ற சத்யராஜ்... கூடவே கவுண்டமணி என்று அந்த ஜோடியை ஹிட்டான ஜோடியாக்கியதில் மணிவண்ணனுக்குப் பெரிய பங்கு உண்டு. ‘அமைதிப்படை’ அமாவாசையையும் அல்வாவையும் மறக்கமுடியுமா? இப்படி அவர் படைத்த படைப்புகள் ஏராளம்.
பிறகு, சிஷ்யன் சுந்தர் சியின் உபயத்தால், மணிவண்ணன் என்றொரு கேரக்டர் ப்ளஸ் வில்லன் ப்ளஸ் காமெடி ஆர்ட்டிஸ்ட் நமக்குக் கிடைத்தார். வில்லன் ரோல் பண்ணவும் மணிவண்ணன். காமெடி ரோல் பண்ணவும் மணிவண்ணன். அகத்தியன் படங்களில் இண்டலெக்ச்சுவல் ரோல் பண்ணவும் மணிவண்ணன். அவரின் நடிப்பைப் பார்க்கும்போதுதான், சத்யராஜின் நக்கல் நையாண்டி டெலிவரியெல்லாம் மணிவண்ணனிடம் இருந்து வந்தது என்பது தெரிந்தது நமக்கு!
பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜா, மணிவண்ணனா என்று கார்ட்டூன் வடிவில் போஸ்டர் அடித்து, தன் முதல்படத்துக்கு விளம்பரமாக்கியதில் இருந்தே தொடங்கிவிட்டது மணிவண்ணன் குறும்பும் குசும்பும்!
பாரதிராஜாவின் சிஷ்யர்தான் மணிவண்ணன். ஆனாலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு, செம ஆட்டம் போட்டார். எந்தக் கதையாக இருந்தாலும் அதைச் சிறப்புற மக்களுக்குப் படையலிட்டதுதான் மணிவண்ணன் ஸ்டைல். மணிவண்ணன் ஸ்பெஷல் என்பதே... அவரின் டைமிங்க் ரைமிங் வசனங்கள். அமர்க்களப்படுத்தி விடுவார் மணிவண்ணன்.கோவை பாஷை எப்படி இருக்கும் என்பதை, கோயம்புத்தூரே போகாதவர்கள் கூட, மணிவண்ணன் படங்களைப் பார்த்துதான் தெரிந்துகொண்டார்கள். ’ண்ணா’ போட்டுப் பேசும் வழக்கத்தையும் ரசிகர்களுக்கு இவரே ஏற்படுத்திக் கொடுத்தார்.
மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி என்றாலே அங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்றார்கள் ரசிகர்கள். அங்கே சத்யராஜ், கவுண்டமணி என எல்லாருக்குள்ளும் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தார் இயக்குநர்.
வில்லன், காமெடி கலந்த வில்லன், கேரக்டர் ரோல், காமெடி கலந்த கேரக்டர் என்று எல்லோரிடமும் ஜோடி போட்டு நடித்தார். யாரிடம் நடித்தாலும் ஜோடிப்பொருத்தம் செம ரகம். அதுதான் மணிவண்ண முத்திரை. கமலுடன் ‘அவ்வை சண்முகி’யில் இவர் செய்த முதலியார் ரோல், தனி ரகம்.
மணிவண்ணன் எப்போதுமே அப்படித்தான்... புது ரகம்.
தமிழ் சினிமாவில், ரங்காராவை நினைத்து கேரக்டர் செய்வார்கள். கதை பண்ணும்போதே, ‘இதை எம்.ஆர்.ராதா பண்ணினா நல்லாருக்கும்’ என முடிவுக்கு வந்தார்கள். ‘இதை பாலையா பண்ணினால் நல்லாருக்கும்’, ‘இதை ரகுவரன் தான் பண்ணமுடியும்’ என்றெல்லாம் கதை டிஸ்கஷனின் போதே முடிவு செய்வார்கள். மணிவண்ணனையும் அப்படித்தான் கதை பண்ணும் போதே, அந்தக் கதைக்குள்ளே நுழைத்துவிடுவார்கள். அசுர நடிகன் மணிவண்ணன். அசால்ட்டாக பண்ணி அசத்திவிடுவார்.
மணிவண்ணன் 1954ம் ஆண்டு பிறந்தார். 2013 ஜூன் மாதம் 15ம் தேதி மறைந்தார். அவர் இறந்து ஏழு வருடங்களாகிவிட்டன. மணிவண்ணன் இப்போது நம்மிடையே இல்லை. ஆனால் திரையுலகில் மணிவண்ணனின் இடம் இன்னும் காலியாகவே..! என்றும் காலியாகவே..!
அசுர நடிகன் மணிவண்ணனை நினைவுகூர்வோம், இந்தநாளில்!
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago