பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது.
திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுஷாந்த் சிங் மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட இரங்கல் ட்வீட்களின் தொகுப்பு:
அக்ஷய் குமார்: உண்மையாகவே இந்தச் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வாயடைத்துப் போய்விட்டேன். சுஷாந்த் சிங் ராஜ்புத்தை சிச்சோரே படத்தில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. என் நண்பர் சாஜித், படத்தின் தயாரிப்பாளரிடம், அந்தப் படம் எனக்கு எவ்வளவு பிடித்தது, அதில் நான் பங்கெடுத்திருக்கலாம் என்று சொன்னேன். எவ்வளவு திறமையான நடிகர். அவரது குடும்பத்துக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை இறைவன் கொடுக்கட்டும்.
» 10 அவதாரங்கள்... 12 வருடங்கள்... ‘தசாவதாரம்’ ; கமலுக்கு ‘உலகநாயகன்’ பட்டம் தந்த கே.எஸ்.ரவிகுமார்!
நவாசுதீன் சித்திக்: என்னால் இதைச் சுத்தமாக நம்பமுடியவில்லை. அதிர்ச்சியைத் தருகிறது. அழகான நடிகர், நல்ல நண்பர். இது மனமுடையச் செய்கிறது. ஆன்மா சாந்தியடையட்டும் என் நண்பா. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதல்கள்.
சோனாக்ஷி சின்ஹா: வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சுஷாந்த். ஒருவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நம்மால் அறிய முடியாது. எல்லோரிடமும் கனிவாக இருங்கள். அவரது குடும்பத்துக்கும், அன்பார்ந்தவர்களுக்கும் எனது அனுதாபங்கள்
கரண் ஜோஹர்: மனதை உடைக்கும் செய்தி. நாங்கள் பகிர்ந்து கொண்ட இனிய நேரங்கள் இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கின்றன. என்னால் இதை நம்ப முடியவில்லை. உன் ஆன்மா சாந்தியடையட்டும் நண்பா. இந்த அதிர்ச்சி தணியும் போது நல்ல நினைவுகள் மட்டுமே மீதமிருக்கும்
அனுஷ்கா சர்மா: சுஷாந்த், நீங்கள் இவ்வளவு சீக்கிரம் இறந்திருக்கக் கூடாத இளமையான, திறமையானவர். உங்களுக்கிருந்த பிரச்சினைகளிலிருந்து நீங்கள் மீள உதவி செய்ய முடியாத ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து, வருத்தமடைகிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
அஜய் தேவ்கன்: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் உண்மையிலேயே வருத்தமடையச் செய்கிறது. என்ன ஒரு துயரமான இழப்பு. அவரது குடும்பத்துக்கும், அன்பார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் .
ஷாகித் கபூர்: சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்டேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்குத் தரட்டும். இதை ஏற்றுக்கொள்ள இன்னும் எனக்குக் கடினமாக இருக்கிறது.
ராம் கோபால் வர்மா: இதுதான் பாலிவுட் அனுபவித்துள்ள மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எவ்வளவு இளமையானவர். எவ்வளவு வாழ்க்கை மீதமுள்ளது. பிறகு ஏன் சுஷாந்த் சிங் ராஜ்புத்?
ரவீனா: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளேன். வாயடைத்துப் போய்விட்டேன். என்ன ஒரு துயரம். அவ்வளவு இளமையான, திறமையானவர். இன்னும் அவர் போக வேண்டிய தூரம் நிறைய இருந்தது. ஆன்மா சாந்தியடையட்டும் அன்பார்ந்த சுஷாந்த்
காஜல் அகர்வால்: அதிர்ச்சியளிக்கிறது. ஆழமாகப் பாதிக்கிறது. சுஷாந்தின் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள். அவருக்கு வாழ்வின் அந்தப் பக்கம் அமைதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வெங்கட் பிரபு: இதை நம்ப முடியவில்லை!! இது ஒரு தீர்வல்ல. ஆன்மா சாந்தியடையட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத். ட்விட்டரில் இருக்கும் மக்களிடம் பேசுவது நல்லது.
மகேஷ் பாபு: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம் குறித்துக் கேள்விப்பட்டு விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். அவ்வளவு திறமையானவர். இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அவரது ஆன்மாவுக்கு அமைதியும், வழிகாட்டுதலும் கிடைக்கட்டும். இந்த சோகத்தை, இழப்பைத் தாங்க அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்கள்
விக்னேஷ் சிவன்: தயவு செய்து தயவு செய்து இந்தச் செய்தி பொய் என்று சொல்லுங்க. கண்ணீர் வழிகிறது. பல அற்புதமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த மனிதர். என்றும் புன்னகையுடன், மகிழ்ச்சியைப் பரப்பியவர். இந்த இளைஞர் இவ்வளவு சீக்கிரம் போகக் கூடாது. செய்ய இன்னும் எவ்வளவோ இருக்கிறது, சாதிக்க நிறைய இருக்கிறது. இதயம் கனக்கிறது.
நிவின் பாலி: இதைக் கேள்விப்பட்டு வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். எங்களைச் சீக்கிரமாகப் பிரிந்துவிட்டீர்கள் சுஷாந்த். உங்கள் இழப்பை உணர்வோம்.
துல்கர் சல்மான்: மனமுடையவைக்கும் செய்தி இது. நான் சந்தித்த, தனிப்பட்ட முறையில் தெரிந்த நபர் அல்ல. ஆனால் இது பதைபதைக்க வைக்கிறது. எவ்வளவு திறமை, எவ்வளவு இளமையானவர். ஆன்மா சாந்தியடையட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
தமன்னா: அதிர்ச்சியில் இருக்கிறேன், மனமுடைந்துவிட்டேன். திறமையான இளம் நடிகர் ஒருவர் சீக்கிரமாக நம்மைப் பிரிந்துவிட்டார். ஆன்மா சாந்தியடையட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத்
பிரசன்னா: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் என்பதைக் கேள்விப்பட்டு மனமுடைந்துவிட்டேன். அவர் ஒரு நல்ல திறமையாளர். அவர் வாழ்க்கையில் எது தவறாகப் போயிருக்கும் என்று யோசிக்கிறேன். குறைந்தது அவரது மரணத்தில் அவருக்கு அமைதி கிடைக்கட்டும். ஆனால் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் சொல்லும் வயதல்ல அவருக்கு. வருத்தம்
குஷ்பு: அதிர்ச்சி, திகைப்பைத்தான் இப்போது நான் உணர்கிறேன். விவரிக்க வார்த்தைகள் இல்லை. சுஷாந்த் சிங் இறந்துவிட்டாரா? ஏன்? ஏன் இவ்வளவு சீக்கிர? தீயவற்றை எதிர்த்து போராட ஏன் துணிச்சலாக இருந்திருக்கக்கூடாது? ஏன் இன்னும் கொஞ்சம் கடுமையாக முயற்சித்திருக்கக் கூடாது? நான் முற்றிலும் நடுக்கத்திலும், கோபத்திலும் இருக்கிறேன். மரணம் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்
சாந்தனு: எவ்வளவு பணமும், ஆரோக்கியமும், வெற்றியும் இருந்தாலும், எதுவும் உங்களுக்கு மன அமைதி தராது என்பதை இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது. அன்பைப் பரப்புங்கள், வெறுப்பை அல்ல. உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் யாரிடமாவது பேசுங்கள். தனியாகக் கஷ்டப்படாதீர்கள். 2020 ஏற்கனவே எங்களைச் சிக்கித் தவிக்க வைத்து, மனமுடையச் செய்துவிட்டாய். இதற்கு மேல் எதுவும் வேண்டாம்.
வரலெட்சுமி: இது உண்மையாக இருக்கக்கூடாது சுஷாந்த் சிங் ராஜ்புத். ஏன் இந்த வருடம் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே போகிறது!
கீர்த்தி சுரேஷ்: அதிர்ச்சியாக இருக்கிறது. வாயடைத்துப் போய்விட்டேன். இந்த இளம் திறமை காலமானதை நம்ப முடியவில்லை. எவ்வளவு சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
ஹன்சிகா: விவரிக்க வார்த்தைகள் இல்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கேள்விப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது. சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago