சிவாஜியிடம் சாதுரியமாக வேலை வாங்கிய கே.எஸ்.ரவிகுமார் 

By செய்திப்பிரிவு

'படையப்பா' படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியிடம் சாதுரியமாக வேலை வாங்கிய அனுபவம் ஒன்றை கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார்.

1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'படையப்பா'. இதில் சிவாஜி, ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, நாசர், செந்தில், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில், சிவாஜியிடம் சாதுர்யமாக வேலை வாங்கிய அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் கே.எஸ்.ரவிகுமார். அந்தச் சம்பவம் இதோ:

'படையப்பா' படத்தில் சிவாஜி மற்றும் மணிவண்ணன் இருவருக்கும் இடையேயான பிரச்சினை உருவாகும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சி படப்பிடிப்புக்கு எல்லாம் தயார் செய்து, ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டார்கள். அப்போது சிவாஜியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. ஆனால் அழுத்தம், கோபம் எல்லாம் இருந்தாலும் சத்தமாக பேசக் கூடாது என்பது தான் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் எண்ணம். இதை எப்படி சிவாஜியிடம் சொல்வது என்பது அவருடைய யோசனை. இது படக்குழுவினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் படப்பிடிப்பிலிருந்த அனைவரையுமே பயங்கரமாகத் திட்டியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அப்போது சிவாஜி - ரஜினி இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். "ஏன் இயக்குநர் தேவையில்லாமல் கத்திக் கொண்டிருக்கிறார்" என்று சிவாஜி ரஜினியிடம் கேட்டிருக்கிறார். எல்லாம் சரி செய்து படப்பிடிப்புக்கு தயாரானவுடன் சிவாஜிக்கு அருகில் போய் "டேக் போகலாம் சார்.. ஒரு முறை வசனத்தைச் சொல்லுங்கள்" எனக் கேட்டிருக்கிறார். "டேய்.. எத்தனை வருட அனுபவம் அதெல்லாம் ஞாபகம் இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார் சிவாஜி.

உடனே சிவாஜியின் வாய்க்கு அருகில் காதை வைத்து, "சார் ஒரு சின்ன கரெக்‌ஷன் இருக்கிறது சொல்லுங்கள்" என்று கேட்டிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அப்போது கே.எஸ்.ரவிகுமார் ரொம்ப பக்கத்திலேயே இருப்பதால், சத்தத்தைக் குறைத்துச் சொல்லியிருக்கிறார் சிவாஜி. உடனே "சூப்பர் சார்.. இப்போது எப்படி சொன்னீங்களோ அதை அப்படியே ஒரு சதவீதம் கூட சத்தத்தைக் கூட்டாமல் டேக்கில் சொல்லிவிடுங்கள்" என்று வந்துவிட்டார் கே.எஸ்.ரவிகுமார். பின்பு சிவாஜியை பார்க்கவே இல்லை. அப்படி அரங்கில் உள்ளவர்களை திட்டிக் கொண்டே நைசாக நழுவி வந்துவிட்டார். அவர் சத்தம் குறைவாகப் பேசி முடித்து டேக் ஓ.கே ஆனவுடன் ஒட்டுமொத்த படக்குழுவுமே கைதட்டியிருக்கிறது. அது தான் இப்போது படத்திலும் இருக்கிறது.

பின்பு கே.எஸ்.ரவிகுமாரை அழைத்த சிவாஜி, "இயக்குநர் கேட்பதைக் கொடுக்கப் போகிறேன், அதற்கு ஏன் மற்றவர்களை திட்டிட்டு இருக்க. முன்பு சத்தமாகப் பேசி நடித்த போதும் கைதட்டினார்கள். அது அப்படியே வந்துவிட்டது. சத்தத்தைக் குறைக்கச் சொன்னால், குறைக்கப் போகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். உடனே காலைத் தொட்டுக் கும்பிட்டு வந்துவிட்டார் கே.எஸ்.ரவிகுமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE