அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்த சூரி

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி ஏற்பாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சூரி ஆன்லைன் வகுப்பு எடுத்துள்ளார்

கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதி முதல் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. நடிகர்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இதில் வித்தியாசமாக சூரி தனது குழந்தைகளுடன், தினமும் ஒவ்வொரு கருத்துடன் கூறிய சின்ன வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இயலாதோர்க்கு உதவிகள், காவல்துறையினரிடம் ஆட்டோகிராப், பெப்சி அமைப்பு உதவி என தொடர்ச்சியாகச் செய்து வருகிறார் சூரி.

தற்போது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்துள்ளார் சூரி. மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டும் விதமாக 'சிரிப்போம் சிந்திப்போம்' என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.

தற்போது உள்ள காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், விடாமுயற்சி, தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என பகிர்ந்து கொண்டார் சூரி. மேலும், மாணவர்களின் குறும்புத்தனமான கேள்விகளுக்கும் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE