நம்மைச் சுற்றி பல வகைகளில் சுரண்டல் நடக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான் - இன்னும் சில கற்களை உடைக்க வேண்டும்: கமல்

By செய்திப்பிரிவு

'தலைவன் இருக்கின்றான்' நேரலை கலந்துரையாடலில் சுய ஒழுக்கம் தொடர்பாக கேள்விக்கு கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே பதிலளித்துள்ளனர்.

'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரில் கமல் - விஜய் சேதுபதி இருவருமே இன்ஸ்டாகிராம் நேரலையில் மே 2-ம் தேதி கலந்துரையாடினார்கள். அப்போது 'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரில் பல்வேறு பிரபலங்கள் தொடர்ச்சியாக கமலுடன் கலந்துரையாட இருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி இன்று (ஜூன் 12) கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துரையாடல் நடைபெற்றது. 'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரிலேயே நடந்த இந்தக் கலந்துரையாடல் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே தமிழ் மீதான ஆர்வம், இசை, படங்களின் பின்னணி உள்ளிட்டவை குறித்து பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வை அபிஷேக் தொகுத்து வழங்கினார்.

சுய ஒழுக்கம் தொடர்பாக கேள்விக்கு கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் பதிலளித்துள்ளனர். அந்தப் பகுதி:

அபிஷேக்: கமல்ஹாசன், ரஹ்மான், நீங்கள் இருவருமே சுய ஒழுக்கத்துடன் இருந்திருக்கிறீர்கள், உங்கள் சூழலை உணர்ந்து கண்ணியமாக நடந்திருக்கிறீர்கள், அது இல்லாமல் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது. உங்களது இந்த சுய உணர்வைப் பற்றிச் சொல்லுங்கள்?

ஏ.ஆர்.ரஹ்மான்: ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் அந்த சமூகத்தில் இருக்கும் சாதனையாளர்கள், அறிஞர்கள், சுய உணர்வு இருப்பவர்கள் நல்லறிவைப் பரப்ப வேண்டும். எனக்கு அப்படி ஒரு கனவு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த சுய உணர்வு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாம் எந்த நாட்டுக்குப் போனாலும் நம்மிடம் அந்தப் பெருமிதம் இருக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக நிற்க வேண்டும். தலைகுனிந்து ஐயோ நம்மிடம் இது இல்லையே என்றெல்லாம் எண்ணக்கூடாது. கல்வி, சுய மரியாதை என அனைத்தும் நம்மிடம் சரியாக இருக்க வேண்டும். அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நம்மைச் சுற்றிப் பல வகைகளில் சுரண்டல் நடக்கிறது.

நான் இந்த அரசியல் தலைவரைப் பின்பற்றுகிறேன், இந்தக் கலைஞரை பின்பற்றுகிறேன், இந்த நாயகரைப் பின்பற்றுகிறேன் என இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். எல்லாம் சரி தான். அதே நேரத்தில் அவர்கள் வீட்டை, குடும்பத்தை மறந்து விடக்கூடாது. அவர்கள் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும். நீங்கள் சம்பாதிக்கவில்லை என்றால் உங்கள் சகோதரி, மனைவி, குழந்தை அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்து அவர்களை முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி, சமூகத்தில் நல்ல இடம் எனத் தேடித் தர வேண்டும்.

ஏனென்றால் உலகில் இப்போது நிறையப் பிரிவினை உள்ளது. வட இந்தியா, தென்னிந்தியா, தமிழ், மற்ற மொழி என இப்படிப் பல பிரிவினைகளுடன் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது இருக்கும் சூழலில், மொழிகள் தாண்டி, தேசம் தாண்டி, ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தின் தலைவரும் பிழைக்க வேண்டும். அம்மா அப்பா என இருவரும் தங்கள் குழந்தைகளைக் கல்வி, கலை என முன்னேற்ற வேண்டும்.

அது வரும் போது தானாக நாம் பாராட்டும் விஷயங்களின் தரம், நம் தேசத்துக்கு நாம் தரும் பங்களிப்பின் தரம், எல்லாமே உயரும் என்று நினைக்கிறேன். கமல் அவர்களைப் பார்க்கும்போது அவரிடமிருந்து நாம் நிறையக் கற்றிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அவர் எப்படி நம் ரசனையை செதுக்கியிருக்கிறார் என்று நினைக்கும்போது அவருக்கு என் நன்றிகள். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

கமல்ஹாசன்: உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி ரஹ்மான். இது சம்பிரதாய நன்றி அல்ல. தலைமுறைகளுக்கு நடுவில் ஒரு புரிதல் இல்லையென்றால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பதை நான் நம்புகிறேன். சிவாஜி,எம்.ஜி.ஆர் ஆகியோர் செய்த திரைப்படங்களை கேலி செய்வது, குறை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதுவும் இந்த டிஜிட்டல் உலகில் அந்தப் படங்களைப் பல முறைப் போட்டுப் பார்த்து ஆயிரம் குறைகளை சொல்லலாம். ஆனால் அவர்கள் இருந்த சூழலைப் புரிந்து கொண்டு, அவர்கள் ஏறி வந்த படியின் அடுத்த படியில் தான் நாம் இருக்கிறோம் என்று புரிந்தால் அந்த தொடர்ச்சி புரியும்.

அவர்கள் பயணத்தின் தொடரும் பகுதி நாங்கள் தான். சிவாஜி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது இயல்பாகச் சொன்னார், "நான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்" என்று.

அதற்கு நான், "எந்தக் கலைஞனுக்கும் ஒத்திக்கை பார்ப்பதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. அதை அடுத்த தலைமுறை தான் அரங்கேற்றுவார்கள்" என்றேன். அன்றாடக் கூலிக்காக நாம் செய்யும் வேலைகள் கணக்கில் வராது. அந்த வேலைகளைத் தாண்டி யோசிக்கும் போது, கற்பனை செய்யும் போது அதை முடிக்க உங்கள் வாழ்நாள் போதாமல் இருக்கலாம். அந்த அறிவை நீங்கள் அடுத்த தலைமுறைக்குத் தரும்போது அது முடிக்கப்படும். உங்கள் கனவுகள் நிறைவேறும். அது உங்கள் மூலமாக நடக்காமல் போகலாம். எனவே தலைமுறைகளுக்கு இடையேயான உரையாடல் முக்கியம்.

என் நண்பர் தசரதன் என்று ஒருவர் இருந்தார். மிகத் திறமைசாலி. இயக்குநர் சங்கரைப் போலப் பெரிய அளவு வளர்ந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரது சூழல், அதன் ஏழ்மையிலிருந்து அவரால் தப்பி வர முடியவில்லை. இப்படி எவ்வளவு குழந்தைகள் வீணாகிறார்களோ என்று தெரியவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான்: அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் எல்லாம் ஒரு கிராமத்தில் பிறந்திருக்கிறீர்கள், ஒரு சாதியில் பிறந்தீர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி சிந்திக்க உனக்குத் தகுதியில்லை என்று சொல்லியே வளர்க்கப்பட்டார்கள். அப்படியான தடைகள் முதலில் உடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசன்: அந்த தடைகள் உடைக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இன்னும் வேலை முழுதாக முடியவில்லை. இன்னும் மீதம் இருக்கிறது. இன்னும் சில கற்களை உடைக்க வேண்டும். ஏழை பணக்காரன் இருவரும் இருக்கத்தான் செய்வார்கள். கலையை நன்றாகத் தேர்ந்தவர்கள், சரியாக வராதவர்கள் என இருவரும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் மதிக்கத் தெரிய வேண்டும் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் கலை சரியாகத் தேராதவர்கள் கூட கலைஞர்கள் என்ற கூட்டத்தில் ஒருவர் தான். அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். அவரது பங்காற்றலும் இருக்கும். மோசமான படங்களும் என்னைப் பாதிக்கும். இதை விட நன்றாக எடுக்க வேண்டும் என்று தோன்றும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்