ஜேஸன் பார்ன் படங்கள் விடுத்த சவாலில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாறின: இயக்குநர் கருத்து

By பிடிஐ

ஜேஸன் பார்ன் கதாபாத்திரம் தோன்றும் திரைப்படங்கள் ஜேம்ஸ் பாண்ட் திரை வரிசைக்கு ஒரு சவாலைத் தந்து அந்தப் படங்களின் தன்மையை மாற்றின என்று இயக்குநர் பால் க்ரீன்க்ராஸ் கூறியுள்ளார்.

'தி பார்ன் ஐடன்டிடி' படத்துடன் ஆரம்பித்த ஜேஸன் பார்ன் திரை வரிசையில் மொத்தம் 5 படங்கள் உள்ளன. இதில் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களையும், ஜேஸன் பார்ன் திரைப்படத்தையும் க்ரீன்க்ராஸ் இயக்கியிருந்தார். பார்ன் திரைப்படங்கள் விடுத்த சவாலுக்கு 007 திரைப்படங்கள் சிறப்பாகப் பதில் கூறியதாகவும் க்ரீன்க்ராஸ் கூறியுள்ளார்.

"ஜேஸன் பார்ன் திரைக்கு வரும்போது அது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு ஒரு வகையில் சவால் விடுத்தது என நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அப்போதிலிருந்து சிறப்பாகவே அந்தச் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள்" என்று ஒரு பேட்டியில் க்ரீன்க்ராஸ் பேசியுள்ளார்.

கடந்த காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை வலதுசாரி ஏகாதிபத்திய முட்டாள் என்று வர்ணித்திருந்தது குறித்துக் கேட்டபோது, "அந்த நாட்களில் நான் இளமை வேகத்தில் அப்படி துடுக்காகப் பேசிவிட்டேன். ஆனால் எனது எண்ணங்கள் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றியதுதானே தவிர அந்த திரை வரிசையைப் பற்றியது அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று க்ரீன்க்ராஸ் பதிலளித்துள்ளார்.

அடுத்ததாக டாம் ஹாங்ஸ் நடிப்பில் 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்' என்ற திரைப்படத்தை க்ரீன்க்ராஸ் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன் 'கேப்டன் ஃபிலிப்ஸ்' படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE