தேனீக்கள் கடி, மழை, மேகமூட்டம்: 'பெண்குயின்' படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள்

தேனீக்கள் கடி மற்றும் கடும் மழை, மேகமூட்டத்துக்கு இடையே 'பெண்குயின்' படப்பிடிப்பை படக்குழு முடித்தது தற்போது தெரியவந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது பட்ட கஷ்டங்கள் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் ஈஸ்வர் கார்த்திக் கூறியிருப்பதாவது:

"கொடைக்கானலில் காட்டில் படப்பிடிப்பு செய்து கொண்டிருக்கும்போது லைட்டின் வெளிச்சத்தால் தேன்கூடு ஒன்று கலைந்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தொடங்கி ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கடித்துவிட்டது. அதில் 4 பேரை அதிகமாகக் கடித்து, மயக்கம் போட்டுவிட்டார்கள். ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி, மயக்கம் போட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவர்கள் வந்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் செக் பண்ணி அரை நாள் கழித்துதான் அடுத்து ஷூட்டிங் போனோம்.

மலைப்பகுதியில் படப்பிடிப்பு என்பதால், தொடர்ச்சியாக 5 மணி நேரம் வரை தான் படப்பிடிப்பு செய்யவே முடியும். திடீரென்று மேகங்கள் மூடிவிடும் அல்லது மழை வந்துவிடும். அதற்கு இடையே தான் ஷூட்டிங்கே செய்தோம். நீங்கள் பார்க்கவுள்ள காட்சிகள் எல்லாமே அந்தக் கஷ்டத்துக்கு இடையே படமாக்கியதுதான். ஒட்டுமொத்தமாக 36 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளோம்".

இவ்வாறு இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE