'மகளிர் மட்டும்' படத்தில் தனது பணி என்ன? - கமல் வெளிப்படை

By செய்திப்பிரிவு

'மகளிர் மட்டும்' படத்தில் தனது பணி என்ன என்பதை கமல் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

1994-ம் ஆண்டு கமல் தயாரிப்பில் வெளியான படம் 'மகளிர் மட்டும்'. கமல் கதைக்கு, கிரேஸி மோகன் திரைக்கதை எழுத சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியானது. பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்தில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த ஜூன் 10-ம் தேதி கிரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவு தினமாகும். அன்றைய தினம் அவரோடு பயணித்தவர்கள் ஒன்றிணைந்து ஜூம் செயலி மூலமாக தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இதனை டோக்கியோ தமிழ்ச் சங்கம் நடத்தியது. இதில் கமலும் கலந்து கொண்டார்.

அப்போது 'மகளிர் மட்டும்' படம் குறித்த நினைவுகள் குறித்து கமலிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

"படத்தின் ஐடியாவைச் சொன்னேன். கிரேஸி மோகன், ஊர்வசி மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு முதல் நாள் படப்பிடிப்புக்குப் போனேன். சின்ன கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றார்கள், பின்பு அதற்காகப் போனேன். மீதி அனைத்துமே இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், கிரேஸி மோகன் மற்றும் ஊர்வசி ஆகியோர் பார்த்துக் கொண்டார்கள்.

நாயகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துப் பார்த்துக் கொண்டது ஊர்வசி தான். மேலாளர் மாதிரி பார்த்துக் கொண்டார். அந்தப் படம் முடிந்தவுடன் தான் அவருக்கு ராட்சசி என்று பட்டம் வைத்தேன். அந்தப் படத்தின் என்னுடைய பங்கு என்றால் பைனான்ஸ் தயார் செய்தது மற்றும் போஸ்டர் அடித்தது மட்டும் தான்.

அந்தப் படத்தில் மீதி கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு ஆட்களை நினைத்தோம். ஊர்வசி கதாபாத்திரத்துக்கு அவரைத் தவிர வேறு யாரையும் நினைக்கவே இல்லை. அந்தப் படத்தில் நடித்த நாயகிகள் ஒவ்வொரு வகையில் ஸ்டார்ஸ். 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து, ஒரு குடும்பமாக மாறிவிட்டார்கள். அதே மாதிரியான குடும்ப ஒற்றுமையை அந்தப் படத்துக்குப் பிறகு 'பஞ்சதந்திரம்' படத்தில் தான் பார்த்தேன். "

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE