புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அன்பே அவர்களுக்காக உழைக்கக் காரணம்: சோனு சூட்

புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது அவர்கள் மீதான அன்பினால்தான் என்றும், அதற்கு அரசியல் காரணங்கள் எதுவுமில்லை என்றும் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை நடிகர் சோனு சூட் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகச் செய்து வருகிறார். பல புலம்பெயர் தொழிலாளர்கள் சோனுவைக் கடவுளைப் போல பாவித்து வாழ்த்தி வருகின்றனர்.

இதுவரை 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் தொழிலாளர்களை மகாராஷ்டிராவிலிருந்து, ஒடிசா, பிஹார், உ.பி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சோனு சூட் கூறுகிறார். கடைசி புலம்பெயர் தொழிலாளி வீடு சேரும் வரை தான் ஓயப்போவதில்லை என்று ஏற்கனவே சோனு சூட் கூறியிருந்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று 180 தொழிலாளர்களை விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைத்திருக்கும் சோனு சூட், அதற்கு முன் கேரளாவிலிருந்து 177 தொழிலாளர்களை விமானம் மூலம் ஒடிசா அனுப்பி வைத்திருந்தார்.

சோனு சூட், மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங்க் ஜோஷ்யாரியைச் சந்தித்துள்ளார். ஆளுநரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சோனுவின் சேவையைப் பாராட்டியுள்ளார்.

அதே நேரத்தில் ஆளுங்கட்சி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத், பாஜகவின் உந்துதலின் பெயரில், தாக்கரே அரசாங்கத்தின் இயலாமை இது என்று சுட்டிக் காட்டத்தான் சோனு சூட் இதெல்லாம் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்துப் பேசியுள்ள சோனு சூட், "எனக்கு அரசியலில் எந்த வேலையும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அன்பினால் மட்டுமே இதைச் செய்கிறேன். அவர்கள் அவர்களது குடும்பத்தோடு சேர நான் உதவ விரும்புகிறேன்.

நான் அவர்களுக்காக வருவதற்குக் காரணம் நானும் மும்பைக்கு புலம்பெயர்ந்துதான் வந்தேன். ஒரு நாள் பஞ்சாப்பிலிருந்து ரயிலேறி இங்கு வந்து சேர்ந்தேன். எல்லோருமே நல்ல வாழ்க்கைக்கான கனவோடுதான் நகரங்களுக்கு வருகிறார்கள். எனவே அவர்களின் கஷ்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர்களின் போராட்டத்தைப் பார்க்கும் போது எனது போராட்டம் நினைவுக்கு வருகிறது. எனக்கு ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தது. மே 9 அன்று என் நண்பர் ஒருவருடன் உணவு விநியோகித்துக் கொண்டிருக்கும் போதுதான் பல தொழிலாளர்கள் மும்பையை விட்டு நடந்தே செல்வதும், பசிக் கொடுமையால் உயிரிழப்பதும் தெரியவந்தது. சில தொழிலாளர்கள், கர்நாடகாவில் இருக்கும் தங்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருப்பதாக என்னிடம் கூறினர்.

அவர்களால் தான் நம் நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களை எப்படி இப்படியே விடுவது. நான் பார்த்த காட்சிகள் என்னைத் தூங்கவிடவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து நெடுஞ்சாலையில் நடந்து போகும் தொழிலாளர்களைப் பார்க்கும் போது இவர்களுக்காக எதாவது செய்வது முக்கியம் என்பதை உணர்ந்தேன்" என்று சோனு சூட் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களில், பல்வேறு மாநில அரசு அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, 300 தொழிலாளர்களைப் பேருந்து மூலம் முதல் கட்டமாக அவர்களின் சொந்த ஊருக்கு சோனு சூட் அனுப்பி வைத்தார். அவரே நேரடியாக வந்து அனைவரையும் வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் சோனு சூட்டுக்கு நிறைய கோரிக்கைகள் வர ஆரம்பித்தன. இவற்றை தனது குடும்பமும், நண்பர்களும் பார்த்து ஒருங்கிணைப்பதாகக் கூறும் சோனு சூட், மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது என்கிறார்.

அடிமட்ட அரசு அதிகாரிகளிடமிருந்து, உயர்மட்டத்தில் இருப்பவர்கள் வரை பலரிடம் பேசி அனுமதி பெற்றுள்ளார் சோனு சூட். ஆவணங்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் இவரது அணியே செய்கிறது. ஆனால் இப்படியான அனுமதி பெறுவதுதான் மிகக் கடினமான வேலையாக இருக்கிறது என்கிறார். மேலும் மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களை தெலங்கானா மாநிலம் அனுமதிக்கவில்லை என்றும் வருந்துகிறார்.

தனது இந்தச் சேவை உணர்வுக்கு தனது பெற்றோர் சக்தி மற்றும் சரோஜ் சூட் ஆகியோர் தான் காரணம் என்று அவர்களைக் கைகாட்டும் சோனு சூட், தனது நட்சத்திர அந்தஸ்து இந்த வேலையைச் சீக்கிரமாகச் செய்ய உதவுகிறது என்று புன்னகைக்கிறார்.

"ஒவ்வொருவரும் அவரால் முடிந்ததைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு சமையலறையிலும் கூடுதலாக உணவு இருக்க வேண்டும். அது காய்கறி விற்பவருக்கோ, பாதுகாவலருக்கோ, யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். தேசத்தில் யாரும் பசியுடன், வீடின்றி தூங்கக்கூடாது" என்று உறுதியாகக் கூறி முடிக்கிறார் சோனு சூட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE