கிரேஸி மோகன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: சிரிப்பில் வாழும் கலைஞர்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவைக் கலைஞர், என பன்முக ஆளுமைகொண்ட கிரேஸி மோகன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. 2019 ஜூன் 10 அன்று கிரேஸி மோகன் இறந்துவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியாமல் திகைத்து நின்றோம். அவர் இறந்து ஒரு ஆண்டு உருண்டோடி விட்டது என்பதையும் நம்ப மறுக்கிறது மனம். அவருடைய நினைவுநாள் அவருடைய ஆளுமைச் சிறப்புகளை நினைவுகூர்வதற்கான நாளாக அமையட்டும்.

கல்லூரியில் தொடங்கிய விதை

1952 அக்டோபர் 16 அன்று சென்னையில் பிறந்தவர் மோகன். 1972இல் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் மோகன் எழுதிய சிறு நாடகம் அரங்கேற்றப்பட்டது. முதல் முயற்சியிலேயே சிறந்த நாடக ஆசிரியருக்கான பரிசை வென்றார் மோகன். இதைத் தொடர்ந்து தனது தம்பியும் பின்னாளில் தான் இயற்றிய நாடகங்களில் நாயகனாக நடித்தவருமான பாலாஜியின் கல்லூரி விழாக்களிலும் இவர் எழுதிய நாடகங்கள் அரங்கேறின. இவற்றின் மூலம் அன்று செழுமையாக இயங்கிக்கொண்டிருந்த நாடக ஆளுமைகளின் கவனத்தை ஈர்த்தார். எஸ்.வி.சேகர் தொடங்கிய நாடகப்ரியா நாடக் குழுவுக்கான ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகத்தை எழுதினார். 1976இல் முதல்முறையாக அரங்கேற்றபட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த நாடகத்தை இயற்றியவர் என்பதாலேயே கி்ரேஸி என்ற முன்னொட்டு அவருடைய இயற்பெயருடன் இணைந்து கிரேஸி மோகன் என்று அழைக்கப்படலானார்.

உலகம் சுற்றிய நாடகங்கள்

1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவைத் தொடங்கினார் கிரேஸி மோகன். அவருடையே தம்பி மற்றும் நண்பர்கள் அதில் நடிகர்களாகவும் திரைமறைவுக் கலைஞர்களாகவும் பங்கேற்றனர். ‘மாது’ பாலாஜி, ‘சீனு’ மோகன். ’அப்பா’ ரமேஷ் என கிரேஸி மோகன் நாடகங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் பலர். இந்த நாடக் குழுவின் மூலம் கிரேஸி மோகன் படைத்த 30-க்கும் மேற்பட்ட நாடகங்கள் இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான முறை மேடையேற்றப் பட்டுள்ளன. கிரேஸி மோகன் தன்னுடைய இறுதி நாட்கள் வரை இந்த நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சினிமாத் துறையில் சாதித்த பிறகும் மேடை நாடகத்தையே தன் உயிர்மூச்சாகக் கருதினார்.

சிகரத்தின் அறிமுகம்

கிரேஸி மோகன் தமிழ்த் திரைப்படத்துக்குச் செல்வதற்கு முன் அவருடைய நாடகம் சென்றுவிட்டது. ‘மேரேஜ் மேட் இன் சலூன்’ என்கிற அவருடைய புகழ்பெற்ற நாடகம் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படமாக 1983இல் வெளியானது. அதற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதினார். அதன் பிறகு முக்தா சீனிவாசன் பாண்டியராஜன், எஸ்,வி.சேகர் நாயகர்களாக நடித்த ‘கதாநாயகன்’ படத்துக்கு வசனம் எழுதினார்.

கமலுடன் சகோதர உறவு

1989-ல் வெளியாகி வசூல் சாதனை புரிந்த ‘அபூர்வ சகோதரர்கள்’தான் கிரேஸி மோகனும் கமல்ஹாசனும் இணைந்த முதல் திரைப்படம். அதன் பிறகு இந்த இணை பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்கள் மனதைக் கட்டி ஆண்டது. ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சதிலீலாவதி’, ’அவ்வை சண்முகி’, ‘காதலா காதலா’, ’தெனாலி’, ‘பம்மல் கே.சம்பந்தம்’,’பஞ்சதந்திரம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என கிரேஸி மோகன் வசனம் எழுதிய கமல் படங்கள் எத்தகு துன்பத்திலிருப்பவரையும் விலா நோகச் சிரிக்க வைக்கும் அருமருந்துகள் ஆகின. கிரேஸி மோகன் கமல்ஹாசன் படங்களுக்கு மட்டுமல்லாமல் வேறு நடிகர்கள், இயக்குநர்களின் படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய சினிமாப் புகழுக்கு கமல்ஹாசனே முக்கியக் காரணம் என்று தன்னுடைய கடைசிப் பேட்டியிலும்கூட நன்றியுடன் நினைவுகூர்ந்தார். 1990 களிலும் பத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலும் கமலின் பல பரீட்சார்த்த முயற்சிகள் வணிகரீதியாகத் தோல்வியடைந்த நிலையில் கிரேசி மோகனுடன் அவர் இணைந்த நகைச்சுவைப் படங்களே அவருடைய படங்களுக்கான வணிக மதிப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றின.

பரஸ்பரம் கொண்டு கொடுத்தும் வளர்ந்த இந்த தொழில்முறை நட்பு சகோதரத்துவம் சார்ந்த தனிப்பட்ட உறவாகவும் மலர்ந்தது. இருவரும் உடன்பிறவா சகோதரர்களாகவே வாழ்ந்தனர். கிரேஸியின் இறுதிச் சடங்குக்கு நேரில் சென்று இறுதிவரை உடனிருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் கமல்.

மற்ற நட்சத்திரங்களின் படங்கள்

கமல் – கிரேஸி படங்கள் இறவாப் புகழ்பெற்றிருப்பதாலும் அவற்றின் புகழ் வெளிச்சத்தின் ஒளியில் கிரேஸி மோகனின் மற்ற படங்களுக்கான பங்களிப்புகள் மறைக்கப்பட்டுவிட்டன. ’சின்ன மாப்பிள்ளை’, ‘சின்ன வாத்தியார்’, ‘வியட்நாம் காலனி’, ‘தேடினேன் வந்தது’ என பிரபு நடித்த நான்கு நகைச்சுவைப் படங்களுக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருக்கிறார். இவற்றில் மூன்று படங்களில் நகைச்சுவை அரசன் கவுண்டமணி பிரபுவுடன் இணைந்து பட்டையைக் கிளப்பியதை ரசிகர்களால் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அருணாச்சலம்’, சத்யராஜின் ‘எங்கிருந்தோ வந்தான்’, கார்த்திக்கின் ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’, ‘சிஷ்யா’, பிரபுதேவாவின் ‘மிஸ்டர் ரோமியோ’, அர்ஜுனின் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என 1990-களில் கோலோச்சிய முன்னணி நட்சத்திரங்கள் பலரின் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இந்தத் தலைமுறையின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் நடித்த ‘என்றென்றும் புன்னகை’, சூர்யாவின் தொடக்க காலப் படங்களில் ஒன்றான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ஜெயம் ரவியின் ‘இதயத் திருடன்’ ஆகியவற்றுக்கும் கிரேஸி மோகனே வசனம் எழுதியிருக்கிறார்.

நகைச்சுவையைத் தாண்டி

சுரேஷ் கிருஷ்ணாவின் ’ஆஹா’ கிரேஸி மோகன் வசனத்துக்காகவே கவனிக்கப்பட வேண்டிய படங்களில் ஒன்று. ”அன்னபூரணி ன்னுதான் சொல்லுவா. கூல்ட்ரிங்க்ஸ் பூரணின்னு யாரும் சொல்லமாட்டா” - தன்னை இழிவுபடுத்திய குளிர்பான விற்பனை தொழிலதிபரான விஜயகுமாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமையல்காரரான டெல்லி கணேஷ் சொல்லும் வசனம் மூலம் ஏழையின் சுயகெளரவத்தை தன் நகைச்சுவை பாணியில் பதிவு செய்திருப்பார்.

நகைச்சுவை மட்டுமே எழுதத் தெரிந்தவரல்ல. பல உணர்ச்சிகளையும் தன் வசனங்களிக் கச்சிதமாகப் பதிவு செய்தவர். நகைச்சுவைப் படங்களில் வசனங்களை நகைச்சுவையால் நிரப்பத் தெரிந்த அளவு மற்ற வகைமைகளைச் சேர்ந்த படங்களில் நகைச்சுவை துருத்தித் தெரியாத வகையில் இணைக்கத் தெரிந்தவர்.

தீராத் தமிழ் வேட்கை

தமிழ் மொழியில் புலமையும் தீவிரக் காதலும் கொண்டிருந்தவர் கிரேஸி மோகன். எதுகை மோனையை வைத்துப் பின்னப்பட்ட நகைச்சுவை வசனங்களை தமிழில் பிரபலப்படுத்தியவர் அவரே. அதேபோல் தமிழ் மொழியின் சாத்தியங்களை வைத்துப் பின்னப்படும் வார்த்தை விளையாட்டுகளிலும் வித்தகர். தமிழ்ப் பழமொழிகள், சொலவடைகளை வைத்தும் நகைச்சுவையை உருவாக்கத் தெரிந்தவர். வசனகர்த்தவாக மட்டுமல்லாமல் வெண்பாக்களைப் புனையும் அளவுக்கு அவருடைய தமிழ்ப் புலமை வளர்ந்து நின்றது. நூற்றுக் கணக்கான வெண்பாக்களை எழுதி வெளியிடாமல் வைத்திருந்தார்.

கிரேஸியின் தனித்தன்மை

யாரையும் புண்படுத்தாத, சாதி-மத உணர்வுகளைச் சீண்டாத பாலின ரீதியாகவோ தோற்றத்தை வைத்தோ ஒருவரை இழிவுபடுத்தாத நகைச்சுவைக்குச் சொந்தக்காரர் கிரேஸி மோகன். தன் எழுத்திலும் ஆக்கங்களிலும் வன்முறைக்கோ ஆபாசத்துக்கோ இடமே அளிக்காமல் இருந்தவர். இதுவே ஒரு நகைச்சுவை எழுத்தாளராக அவருடைய சிறப்புகளில் முக்கியமானதும் அனைவரும் பின்பற்ற வேண்டியதுமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்