இந்தாண்டு 'பிக் பாஸ் 4' தொடங்கப்படுமா?

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி இந்தாண்டு தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். இறுதியாக ஜெயிப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தமிழில் தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுமே கமலே தொகுத்து வழங்கியது நினைவு கூரத்தக்கது. வருடந்தோறும் ஜூன் மாதத்தில் தான் விஜய் தொலைக்காட்சி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொடங்கும்.

இந்தாண்டு அதே போல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் அரங்குகள் அமைத்து போட்டி தொடங்கப்படுமா என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி தரப்பில் விசாரித்த போது:

"கண்டிப்பாக் 'பிக் பாஸ் 4' இருக்கும். ஆனால் கரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் அதன் பணிகள் தொடங்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பணிகளைத் தொடங்கவுள்ளோம். எப்போது என்பதை காலம் தான் முடிவு செய்யும். மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி நிறுத்த முடியும். 'பிக் பாஸ் 4' இன்னும் பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு இருக்கிறோம்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு சுமார் 400 பேருக்கும் மேல் பணிபுரிய வேண்டும். எடிட்டிங், ஒளிப்பதிவு என பல்வேறு வேலைகள் அந்த நிகழ்ச்சியில் அடக்கம். இந்த கரோனா அச்சுறுத்தலில் அது சாத்தியமில்லை என்பதால் மட்டுமே தள்ளிவைத்திருக்கிறோம். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பிரம்மாண்ட அறிவிப்பு இருக்கும்"

இவ்வாறு விஜய் தொலைக்காட்சி தரப்பு தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE