சீன மொழியில் ரீமேக் ஆகிறதா 'அசுரன்'?

By செய்திப்பிரிவு

சீன மொழியில் 'அசுரன்' ரீமேக் ஆகவுள்ளதாக வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவியது. தற்போது தெலுங்கில் 'நாராப்பா' என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. கன்னடத்திலும் ரீமேக் ஆகவுள்ளது.

இதனிடையே, நேற்று (ஜூன் 9) முதல் சீன மொழியில் 'அசுரன்' ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏனென்றால், தமிழில் உருவான ஒரு படம், சீன மொழியில் ரீமேக் செய்யப்படுவது இது முதன்முறை என்று பலரும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக 'அசுரன்' படத்தின் தயாரிப்பாளரான தாணுவிடம் கேட்ட போது, "எப்படி இப்படியொரு தகவல் வெளியானது என்று எனக்குத் தெரியவில்லை. சீன மொழியில் இந்தப் படம் ரீமேக் ஆகவில்லை. இது தொடர்பாக என்னிடம் யாரும் பேசவுமில்லை. ஆனால், 'தங்கல்' படத்தைப் போலவே சீன மொழியில் 'அசுரன்' படத்தை டப்பிங் செய்து வெளியிடும் எண்ணமுள்ளது. இது தொடர்பான பணிகள் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கலாம் என இருக்கிறோம்.

'தங்கல்' படம் எப்படி ஆமிர் கானுக்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்து, பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியதோ அதோ போல் 'அசுரன்' படமும் தனுஷுக்கு அமையும்" என்று தெரிவித்தார் தாணு.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தையும், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளார் தாணு. இந்த இரண்டு படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE