'24' 2-ம் பாகம் உருவாகுமா? - இயக்குநர் விக்ரம் குமார் பதில்

By செய்திப்பிரிவு

'24' 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் விக்ரம் குமார் பதிலளித்துள்ளார்.

2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் '24'. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் 2016-ம் ஆண்டு மே 6-ம் தேதி வெளியானது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

'24' படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. கரோனா ஊரடங்கில் இயக்குநர் விக்ரம் குமார் அளித்துள்ள பேட்டியில், "'24' 2-ம் பாகம் உருவாகுமா?" என்ற கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:

"'24' படம் பண்ணும்போதே, 2-ம் பாகம் குறித்து யோசிக்கச் சொல்லி சூர்யா சார் சொன்னார். 2-ம் பாகத்தை சும்மா பண்ணக் கூடாது என்பது என் எண்ணம். வலுவான கதை வேண்டும். '24' 2-ம் பாகத்துக்காக நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான பணிகள் போய்க் கொண்டிருக்கின்றன.

கதை முடிவானவுடன், சூர்யா சாருக்குப் பிடித்திருந்தது என்றால் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டியதுதான். இன்னும் 2-ம் பாகத்துக்கான கதையில் முழுமையான திருப்தி வரவில்லை. அதற்காக எழுதிய கதைகள் எதுவுமே சூர்யா சாருக்குத் தெரியாது. ஏனென்றால் அதில் வந்த கதைகள், காட்சிகள் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் எழுதும் கதை எனக்குப் பிடிக்கவேண்டும்"

இவ்வாறு இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE