கறுப்பினத்தவரை அதிகமாக வேலைக்கு எடுங்கள்: ஹாலிவுட் நடிகர் அறிவுறுத்தல்

By பிடிஐ

ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் கறுப்பினத்தவர்கள் மீது அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகர் மைக்கேல் பி ஜோர்டன் கோரியுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் போராட்டங்கள் வெடித்துப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அப்படி நடந்த ஒரு போராட்டத்தில் பங்கேற்ற கறுப்பின நடிகரான ஜோர்டன் பாலின சமத்துவத்தைப் போல இன ரீதியான சமத்துவமும் வேண்டும் என்று பேசியுள்ளார்.

"நீங்கள் பாலின சமத்துவத்தை 50/50 என்ற விகிதத்தில் பேணுவோம் என இந்த வருடம் உறுதி கொடுத்தீர்கள். கறுப்பின மக்களை வேலைக்கு எடுப்பது பற்றிய உறுதி எங்கே? நாங்கள் கதை சொல்லும் விதத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எங்கள் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். கறுப்பர்களைப் பற்றிய, கறுப்பர்கள் எடுக்கும் படைப்புகள் வர வேண்டும்" என்று ஜோர்டன் பேசியுள்ளார்.

2013-ம் ஆண்டு ஜோர்டன், 'ஃப்ரூட்வேல் ஸ்டேஷன்' என்ற படத்தில், காவல்துறை அதிகாரியால் கொல்லப்படும் கறுப்பின அமெரிக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் நடித்தது இன ரீதியான கொடுமைகளை எதிர்கொண்டிருப்பவர்களின் வலியைப் புரிந்துகொள்ள உதவியது என்று கூறியிருக்கும் ஜோர்டன், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அறிவு கிடைக்கக்கூடாது என்பதற்காக அரசாங்கமும், அடக்குமுறை செய்பவர்களும் எந்த தூரத்துக்கும் செல்வார்கள் என்பதையும் தான் உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், 'ஜஸ்ட் மெர்ஸி' என்ற திரைப்படத்தில் ப்ரையன் ஸ்டீவன்ஸன் என்ற உண்மையான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஜோர்டன் நடித்திருந்தார். தவறாக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் இருந்த ஒரு கறுப்பினத்தவரைக் காப்பாற்றும் கதை இது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபோது, உண்மையில் அவர் எப்படி இருந்தார் என்பது பற்றியும், அவரது திறன், மன ஓட்டம், பிரச்சினைகளை அவர் அணுகும் விதம் ஆகியவற்றையும் தான் கற்றுக்கொண்டதாக ஜோர்டன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE