குழந்தைகள் மீதான வன்கொடுமை எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: கரண் ஜோஹர்

குழந்தைகள் மீதான வன்கொடுமை எந்த வடிவில் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குழந்தைகளின் அப்பாவித்தனத்தைக் காக்க நம்மால் முடிந்த அத்தனையையும் செய்ய வேண்டும் என்றும் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் பற்றிய ஒரு குறும்படத்தை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தக் குறும்படத்தை பானுப்ரீத் கவுர் மற்றும் சர்தக் ஜோஹார் இயக்கியுள்ளனர். பிரபல இயக்குநர் சேகர் கபூர் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகச் செயல்பட்டுள்ளார். குழந்தைகள் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது முக்கியமானது என்று குறிப்பிட்டு இரானி இந்த குறும்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

மேலும் குழந்தைகள் வன்கொடுமையைத் தடுக்க 1098 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், இதுகுறித்து உங்கள் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்றும் இரானி குறிப்பிட்டுள்லார்.

குறும்படத்தைப் பகிர்ந்திருக்கும் கரண் ஜோஹர், "பெற்றோராக நமக்கு நம் குழந்தைகளின் நலன்தான் மிக மிக முக்கியமானது. அதற்கு எதிரான சூழல்களைத் தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகள் மீதான வன்கொடுமை எந்த வடிவில் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு குழந்தையின் அப்பாவித்தனத்தையும் காக்க நம்மால் முடிந்த அத்தனையையும் நாம் செய்ய வேண்டும். நீங்கள் குழந்தைகள் வன்கொடுமை அனுபவிப்பதைப் பார்த்தால், சந்தேகித்தால் உடனே 1098 என்ற எண்ணை அழைத்துப் புகார் கொடுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹர், யாஷ், ரூஹி வியா என இரட்டைக் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்று வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE