ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்தில் கறுப்பினத்தவரை நடிக்க வைக்க அனுமதிக்கவில்லை: இயக்குநர் குற்றச்சாட்டு

'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' திரைப்படத்தில் ஒரு சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் கறுப்பின நடிகரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை என படத்தின் இயக்குநர் ஜோஷ் ட்ரான்க் கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் கேட் மாரா என்ற நடிகை சூ ஸ்டார்ம் என்ற கதாபாத்திரத்தில்ல் நடித்திருந்தார், மைக்கேல் பி ஜோர்டன், மைல்ஸ் டெல்லர் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியடைந்தது.

படத்தின் இறுதி வடிவத்தில் தனக்குத் திருப்தியில்லை என்றும், தயாரிப்பாளர்களின் தலையீடு அதிகம் இருந்ததாகவும் படத்தின் இயக்குநர் ஜோஷ் ட்ரான்க் அப்போதே குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள ட்ரான்க், "(படத் தயாரிப்பின்போது) திரைக்குப் பின் பல சர்ச்சைக்குரிய உரையாடல்கள் நடந்தன. இரண்டு சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களிலும், அவர்களின் தந்தை கதாபாத்திரத்திலும் கறுப்பின நடிகர்களை நடிக்க வைக்கத்தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், அப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுத்து வரும் நிறுவனத்தைக் கையாளும்போது யார் படத்தின் பெரிய நடிகர்களாக இருப்பார்கள் என்பது குறித்து திறந்த மனதுடன் யோசிக்க வேண்டும்.

நான் எனது யோசனையைச் சொன்னபோது, சூ ஸ்டார்ம் கதாபாத்திரத்தில் ஒரு கறுப்பினப் பெண் நடிகரை நடிக்க வைக்கலாம் என்று உத்தேசித்தபோது அதற்கு பலமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நான் நம்பும் ஒரு விஷயத்துக்காகத் தைரியமாக நிற்கும் ஆள் தான். அது எனது தொழில் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றாலும் கூட. ஆனால், அன்று அப்படி முடிவெடுத்து விலகாமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன். அந்த வகையில் நான் தோற்றுவிட்டதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் போராட்டங்கள் வெடித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன ரீதியான புதிய குற்றச்சாட்டை ட்ரான்க் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE