சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்: குஷ்பு நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியிருப்பதை குஷ்பு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்க அனுமதியளித்தது.

இதனைத் தொடர்ந்து ஸ்டெப்ஸ் அமைப்பு, பெப்சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக ஜூன் 8-ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று (ஜூன் 8) முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. இது தொடர்பாக குஷ்பு நேற்று (ஜூன் 7) தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

"அனைத்து வலிகளையும் போராட்டங்களையும் கடந்து தொலைகாட்சி துறை நாளை முதல் இயங்கவுள்ளது. ஊரடங்கால் 70 நாள் இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பை தொடங்குகிறோம். எங்கள் தினக்கூலி தொழிலாளர்களின் முகத்தில் ஒருவழியாக புன்னகையை காண்கிறோம். படப்பிடிப்பு தளங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். உங்களின் விருப்ப நிகழ்ச்சிகள் விரைவில ஒளிபரப்பாகவுள்ளன.

பெப்சி தலைவர் செல்வமணி மற்றும் அவரது குழுவினரின் பெரும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமே இல்லை. எங்கள் உறுப்பினர்களான சுஜாதா கோபால், பாலேஷ்வர், ஷங்கர், பாலு மற்றும் எங்கள் தலைவர் சுஜாதா ஆகியோருக்கும், எங்களுக்கு உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்களுக்கும் மிக்க நன்றி. முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தலைமை செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும், எங்களுக்கு உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒரு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல நாங்க மீண்டும் நிரூபித்துள்ளோம். கடின உழைப்பு, நேர்மை, நல்ல எண்ணங்கள் எப்போதும் தோற்பதில்லை"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE