இயக்குநர் பாண்டிராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்: அமைதியான சாதனையாளர்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு தடம் பதித்த இயக்குநர்களில் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதித்துவரும் இயக்குநரான பாண்டிராஜுக்கு இன்று (ஜூன் 7) பிறந்தநாள்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட அதிக படங்களைக் கொடுத்திருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் எப்போதும் அறிமுக இயக்குநரைப் போல் அமைதியாகவும் பணிவாகவும் இருப்பது அவருடைய தனித்தன்மையான குணம்.

விருதுகளைக் குவித்த முதல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் மைந்தரான பாண்டிராஜ் சேரன், தங்கபச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 2008-ல் வெளியாகி தமிழ் சினிமாவைத் தலைநிமிர வைத்த ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமார், தன் அடுத்த தயாரிப்பில் பாண்டிராஜை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம்தான் ‘பசங்க’. எதிரெதிர் குணாதிசயங்கள். குடும்ப பின்னணியிலிருந்து வரும் இரண்டு சிறுவர்களுக்கிடையிலான மோதலை மையமாக வைத்து பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை அதன் அத்தனை அழகுடனும் சுவாரஸ்யங்களுடனும் சித்தரித்திருந்தார். பைக் ஓட்டுவது போல் கற்பனை செய்துகொண்டே ஓடிச் செல்வது, மழைக்கு ரெயின்கோட் அணிந்து செல்வது, ஒரு மாதத்தின் விடுமுறை தினங்கள் எத்தனை என்று கணக்குப் போட்டுப் பார்ப்பது எனப் படத்தில் பள்ளிக் குழந்தைகளாக வரும் சிறுவர்கள் செய்யும் அத்தனையும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் தம் பள்ளிப் பிராயத்துக்கு அழைத்துச் சென்றன.

இது தவிர ஏழ்மையிலும் தன் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் தந்தையையும், மகனுக்காக தன் கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் இன்னொரு தந்தையையும் எதிரெதிரில் நிறுத்தி பிறகு ஒன்றிணைத்து உறவுகளாக்கி நெகிழ வைத்தார். அந்த வகையில் குழந்தைகள் படமாக மட்டுமல்லாமல் சிறந்த குடும்பப் படமாகவும் அமைந்திருந்தது ‘பசங்க’.

இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரங்களில் நடித்த கிஷோர், ஸ்ரீராம் இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது கிடைத்தது. இது தவிர சிறந்த வசனம்,சிறந்த தமிழ்த் திரைப்படம் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதை வென்றது. பாண்டிராஜின் முதல் படமே மூன்று தேசிய விருதுகளை வென்ற சாதனையைப் படைத்தது. சிறந்த படம் மற்றும் சிறந்த வசனத்துக்கான தமிழக அரசின் விருதுகளும் கிடைத்தன. இது தவிர மேலும் பல தனியார் விருதுகளை இந்தப் படம் வாங்கிக் குவித்தது.

பெருமைக்குரிய அறிமுகங்கள்

அடுத்ததாக ‘வம்சம்’ படத்தை இயக்கினார் பாண்டிராஜ். அந்தப் படத்தில் கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி கதாநாயகனாக அறிமுகமானார். இன்றுவரை தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடிக்கும் நாயக நடிகராக நல்லபெயருடன் வலம்வருகிறார்.

‘மெரினா’ படத்தில் அதுவரை சின்னத் திரையில் கலக்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரை நாயகனாக்கினார். அடுத்த படமான ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’விலும் சிவகார்த்திகேயன்., விமல் இருவரையும் நடிக்க வைத்தார். நகைச்சுவையும் காதலும் சென்டிமெண்ட்டும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக இருந்த அந்தப் படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. இன்று தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். அந்த உச்சநிலையை அடைந்த பிறகு சிவகார்த்திகேயனும் பாண்டிராஜும் மீண்டும் கைகோத்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தனர்.

நாடிவந்த நட்சத்திரங்கள்

சூர்யாவின் தயாரிப்பான ‘பசங்க 2’ படத்தில் இந்த கால சிறுவர்கள சிலருக்கு ஏற்படும் ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினையைக் கையாண்டிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்கள் பலர் இவரை நாடிவந்தார்கள். சிலம்பரசனை வைத்து ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தவாழ்க்கை சார்ந்த மனக்கசப்புகளை மறந்து சிலம்பரசனும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்தார்கள். சந்தானத்துடன் நிறைய படங்களில் நடித்துள்ள சிம்பு இந்தப் படத்தில் முதல் முறையாக சூரியுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்தார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு சிம்புவை அழகான காதலனாகவும் கனிவான இளைஞனாகவும் காண்பித்த படங்களில் இதுவும் ஒன்று. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து பாண்டிராஜ் வழங்கிய ‘கதகளி’ அவரால் பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர்களையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தது.

சக்கரைக்கட்டியான கடைக்குட்டி

தரமான படங்களுக்குப் பெயர்போன சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ பாண்டிராஜின் திறமையை இன்னும் தீர்க்கமாக பறைசாற்றியது எனலாம். சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கிராமத்து விவசாயப் பெருங்குடும்பத்தை முன்வைத்து, குடும்ப உறவுகளின் எப்போதும் நனைக்கும் அன்பு மழையையும் முரண்களையும் அவற்றால் விளையும் சிக்கல்களையும் வெகுஜன கலைவடிவத்துக்கு ஏற்ற வகையில் அளித்தது. அண்ணன் – தங்கை பாசத்தை அதிகமாகப் பார்த்துள்ள சினிமாவில் அக்காள்- தம்பி பாசத்தையும் தாய்மாமனின் அன்பான அரவணைப்பையும் பார்வையாளர் ஒவ்வொருவரின் மனதை உருக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். இதனால் அந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தம் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

வசன வித்தகர்

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் சிறந்த வசனகர்த்தாவாகவும் அறியப்படுகிறார் பாண்டிராஜ். முதல் படத்திலேயே சிறந்த வசனத்துக்கான தேசிய விருதை வாங்கியிருப்பதிலிருந்தே இந்த மரியாதைக்கு அவர் மிகத் தகுதியானவர் என்பது புரிந்துவிடும். புகழ்பெற்ற இயக்குநர் லிங்குசாமி தயாரித்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ திரைப்படத்துக்கு முத்திரை பதிக்கும் வசனங்களை எழுதியிருந்தார் பாண்டிராஜ்.

தன்னை ஒரு குறிப்பிட்ட வகைமாதிரிக்குள் சுருக்கிக்கொள்ளாமல் அனைத்து வகைகளையும் முயற்சித்து அனைத்து அம்சங்களையும் கலந்த தரமான வெகுஜனப் படைப்புகளை அளித்து வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் அறவே இல்லாத தரமான பொழுதுபோக்குப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர் பாண்டிராஜ். அந்த நன்மதிப்பு மென்மேலும் வளரும்வகையில் அவர் இன்னும் பல தரமான வெற்றிப் படங்களைத் தர வேண்டும் என்று இந்தப் பிறந்தநாளில் பாண்டிராஜை வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE