ஓடிடி-ல் வெளியாகிறதா 'க/பெ.ரணசிங்கம்'?

'க/பெ. ரணசிங்கம்' திரைப்படம் ஓடிடி-ல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தலால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 'க/பெ ரணசிங்கம்' படமும் இருக்கிறது என்று தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று பலரும் செய்திகளை வெளியிட்டனர்.

இது தொடர்பாக படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது, "இறுதிக்கட்டப் பணிகள் இப்போது தான் தொடங்கியுள்ளோம். இன்னும் டப்பிங், டிஐ, பின்னணி இசை என நிறையப் பணிகள் இருக்கிறது. பல படங்கள் ஓடிடி-யில் வெளியாகி வருவதால், யாரோ வேண்டுமென்றே இப்படியொரு வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர்.

படத்தின் வெளியீடு என்பது இறுதிக்கட்டப் பணிகள் முடிந்தவுடன் தான் முடிவாகும். ஆகையால் இது வெறும் வதந்தி தான். இந்தச் சமூகத்தில் உள்ள முக்கியமான பிரச்சினையைப் பேசியுள்ளோம். ஆகையால் இது மக்களுக்கான படம். ஆகையால், ஓடிடி வெளியீடு சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்கள்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE