நீ என் ஆசான்: நட்ராஜிடம் மன்னிப்பு கோரியுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப்

நட்ராஜ் என் ஆசான் என்றும் கூறி, அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்

இந்தித் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் நட்டி (எ) நட்ராஜ். தமிழ், தெலுங்கில் சில படங்களுக்கே ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாகத் திரையுலகில் அறிமுகமானார்கள்.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ளாக் ஃப்ரைடே' படத்துக்கு நட்ராஜ் தான் ஒளிப்பதிவாளர். அந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. ஆனால், தான் அளித்த பேட்டிகளில் அனுராக் காஷ்யப் உடனான நட்பைப் பற்றிப் பெருமையாகவே பேசியிருந்தார் நட்ராஜ்.

ஜூன் 4-ம் தேதி தனது ட்விட்டர் பதிவில் அனுராக் கஷ்யாப்பை கடுமையாகச் சாடினார் நட்ராஜ். அதில் "அனுராக் என்னை மறந்துவிட்டு அர்த்தமில்லாமல் பேசுகிறார். அவரோடு பணியாற்றியவர்களைக் கேளுங்கள். அவர் ஒரு முட்டாளன்றி வேறு ஒன்றுமில்லை. முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பார்கள்.நான் ஒரு சுயநலவாதியைப் பற்றிப் பேசினேன். அது அனுராக் காஷ்யப் தான்" என்று குறிப்பிட்டு இருந்தார் நட்ராஜ்.

இந்தப் பதிவுகள் பெரும் வைரலானது. நட்ராஜின் இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நடராஜின் கோபத்தின் வெளிப்பாடு குறித்து ஊடகங்களில் வந்ததைப் படித்தேன். தகவலுக்காக, அவர் என் நண்பர் மட்டுமல்ல, சினிமாவில் நானும் அவரும் ஒன்றாகத்தான் வளர்ந்தோம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் நினைக்கும் காட்சியை ஒளிப்பதிவாளரிடம் எனக்கு விவரிக்கத் தெரியாத போது அவர்தான் எனக்கு அதை எனக்கு கற்றுக் கொடுத்தார். அவர் என்னுடைய ஆசான். அவர் தான் ஒரு கேமராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அவர் தான் என் முதல் சகா.

“Last Train to Mahakali”, “Paanch” and “Black Friday” ஆகிய படங்களை அவர்தான் ஒளிப்பதிவு செய்தார். தடை மற்றும் தெளிவின்மை நிறைந்த காலங்களை நாங்கள் ஒன்றாக கழித்தோம். நடராஜ் தான் என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். நடராஜ் தான் என்னை பாலாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்தான் என்னை ரஜினி சாரை சந்திக்க வைத்தார். அவர்தான் முதன்முதலில் நான் பார்த்த தமிழ் படமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படத்தை என்னைப் பார்க்க வைத்தார். அதுவும் சப்டைட்டில் இல்லாமல். அதன் பிறகுதான் நான் மற்ற தமிழ்ப்படங்களைப் பார்க்க தொடங்கினேன்.

என்னிடம் இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக வருத்தப்பட்டு அவர் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவருக்கு அதற்கான எல்லா உரிமைகளும் உண்டு, இது இரண்டு நண்பர்களுக்கு இடையிலானது. அன்பும் நேர்மையும் நிறைந்த ஒரு இடத்திலிருந்து வந்தவர் அவர். நடராஜ் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். என்னுடைய கடினமான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் சொல்வதைக் கவனியுங்கள், நான் என்னுடைய போனை ஆஃப் செய்து விட்டதால் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

எனவே அவரை தொந்தரவு செய்யாமல் தனியாக விடுங்கள். இதையே இந்த விவகாரத்தில் என்னுடைய அதிகாரபூர்வ அறிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய கோபம் நேர்மையானது. அவருக்குத் தேவைப்படும் நேரத்தில் நான் அவரோடு இருக்கவில்லை, எனக்கு அதைப் பற்றித் தெரியவுமில்லை. எனவே நான் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன் ‘என்னை மன்னித்துவிடுங்கள் நட்டி’"

இவ்வாறு அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE