சோட்டா பீமுக்குத் திருமணமா? - கார்ட்டூனை உருவாக்கியவர்கள் அறிக்கை

By செய்திப்பிரிவு

சோட்டா பீம் கார்ட்டூன் கதாபாத்திரத்துக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற விஷயம் பொய் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மிகப் பிரபலமான கார்ட்டூன் நிகழ்ச்சி சோட்டா பீம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் இந்த நிகழ்ச்சி சென்றடைந்துள்ளது. சோட்டா பீம் எவ்வளவு பிரபலம் என்பது சமீபத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ஒரு ஹேஷ்டேகினால் தெரிந்தது.

இந்த நிகழ்ச்சியில் சோட்டா பீமின் தோழி சுட்கி என்கிற கதாபாத்திரம். சுட்கி கொண்டு வரும் லட்டு இனிப்பைச் சாப்பிட்ட பின் தான் பீமுக்கு அதிக சக்தி கிடைக்கும். இவர்கள் இருப்பது டோலக்பூர் என்கிற கற்பனை ஊரில். இந்த இளவரசி இந்துமதியும் சோட்டா பீமுக்கு தோழி.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், சோட்டா பீம் இந்துமதியோடு செல்வது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. உடனே நமது நெட்டிசன்கள், அதெப்படி நீண்ட நாள் தோழியான, இவ்வளவு நாள் சக்தி தரும் லட்டைக் கொண்டு வந்து கொடுத்த சுட்கியை சோட்டா பீம் ஏமாற்றலாம் என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் #JusticeForChutki என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

மேலும் பல திரைப்படங்களில் வருவது போல நீண்ட நாட்களாகத் தோழியாக இருந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு பணக்காரப் பெண்ணை சோட்டா பீம் மணந்துவிட்டார் என்பது போலவும் பல மீம்கள் பகிரப்பட்டன. தற்போது இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான க்ரீன் கோல்ட் அனிமேஷன், இதுகுறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

"சோட்டா பீம், சுட்கி மற்றும் இந்துமதி என இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் குழந்தைகளே. இந்தக் கதாபாத்திரங்கள் திருமணம் செய்து கொண்டன என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய். இதை வைத்து யாரும் கருத்துப் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நமக்குப் பிடித்தமான குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்கவிடுவோம். அவர்களின் அப்பாவித்தனமான வாழ்க்கையில் காதல், திருமணம் எல்லாம் கொண்டு வர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.

இந்த ஹேஷ்டேக் குறித்தும், விளக்கம் குறித்தும் நையாண்டி செய்து தற்போது பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE