தமிழ் சினிமாவின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 விஜய் தான்: கேயார்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் நம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு இடங்களிலுமே விஜய் தான் இருக்கிறார் என்று தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. தற்போது இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், 'மாஸ்டர்' பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் திரையரங்குகள் திறப்புக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. அப்படி அனுமதியளிக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. 'மாஸ்டர்' படம் வெளியானால், கண்டிப்பாக மக்கள் வருவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான கேயார், திரையரங்குகள் திறக்கப்பட்டால் முதல் படமாக 'மாஸ்டர்' வெளியாகக் கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக வரும் போது மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். கேயார் அறிக்கை பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

தனது அறிக்கை தொடர்பாக கேயார் அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது:

"'மாஸ்டர்' வெளியாகி ஒரு பெரிய கூட்டம் கூடினால் கரோனா தொற்றை அதிகப்படுத்திவிடும் என்று அஞ்சினேன். அதே போல், உடனடியாக வெளியிட்டாலும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இருக்கிறார் விஜய்.

'பிகில்' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே கோலிவுட்டில் 75 கோடி ரூபாயைத் தொட்ட படங்கள். 'மாஸ்டர்' படம் கண்டிப்பாக இதனை முறியடிக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது. கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட உடன் இந்தப் படம் வெளியானால் தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கும்"

இவ்வாறு கேயார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE