‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட படம்.. என்னை அறியாமல் அழுதேன்: இஸ்லாமை தேர்ந்தெடுத்த தருணம் குறித்து யுவன் பகிர்வு

By செய்திப்பிரிவு

இஸ்லாம் மதத்தைத் தேர்ந்தெடுத்த தருணம் எது என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் பகிர்ந்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா. அப்போது பலரும் யுவனின் மதம் மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து யுவனிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், அதற்கு அவரே பதிலளிப்பார் என்று ஷாஃப்ரூன் நிஷா அறிவித்தார். அதில் சில கேள்விகளுக்கு யுவன் வீடியோ வடிவில் பதிலளித்தார். நேற்று (ஜூன் 5) "எந்த ஒரு சம்பவம் இஸ்லாம் மதத்துக்கு யுவன் மாற காரணமாக இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்கள். அந்தக் கேள்விக்கு யுவன் வீடியோ வடிவில் கூறியிருப்பதாவது:

"எந்த தருணத்தில் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்டிருந்தீர்கள். எந்த தருணம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அது ஒரு பயணம் என்று தான் சொல்லவேண்டும். நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே அதாவது என் அம்மா உயிருடன் இருக்கும்போதே இதற்கான தேடல் தொடங்கியது.

2012 உலகம் அழியப்போகிறது, மாயன் காலண்டர் என்றெல்லாம் அப்போது சிலர் சொல்லிவந்தார்கள். அதை தேடுவதற்காக ஒவ்வொன்றாக தேடி தேடி ஒரு கட்டத்தில் குர்ஆனை எடுத்து படித்தேன். முதன்முறை அதை படிக்கும்போது அதில் வார்த்தைகள் மிகவும் கண்டிப்புடன் இருந்தன. ஏன் இவ்வளவு கண்டிப்பான வார்த்தைகளுடன் இருக்கின்றன என்று எனக்கு தோன்றியது.
ஆனால் அதன்பிறகு சில வருடங்கள் கழித்து அம்மா இறந்த பிறகு நண்பர் ஒருவர் மெக்கா சென்றுவிட்டு வந்திருந்தார். அவர் என்னிடம் ஒரு விரிப்பு ஒன்றை கொடுத்து உங்களுக்கு மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில் இதில் அமருங்கள் என்று கூறினார். ஒருநாள் என் சகோதரரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு அம்மாவைப் பற்றி சென்றது. அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசமாகிவிட்டேன். அத்தனை நாளும் அந்த விரிப்பு பற்றிய நினைவே வரவில்லை.

அன்று முதலில் அந்த விரிப்புதான் என் கண்ணில் பட்டது. அப்போது என் போனில் ஒரு மெசேஜ் வந்தது. ஒரு முஸ்லிம் நண்பர் அதை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் ஒரு வானத்தின் படம் இருந்தது. இதில் உனக்கு என்ன தெரிகிறது என்று கேட்டேன். அதில் ‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்டுள்ளது என்று சொன்னார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. உடனே என் அறைக்கு சென்று அந்த விரிப்பில் அமர்ந்து என்னை அறியாமல் அழுதேன்.

தலையை கீழே வைத்து என் பாவத்தை மன்னித்து விடு இறைவா என்று என்னை அறியாமல் சொன்னேன். அதுதான் ஒரு திருப்புமுனை என்று கூட சொல்லலாம். பிறகு மீண்டும் குர்ஆனை எடுத்து படித்தேன். அப்போதும் கண்டிப்பான வார்த்தைகளுடனே இருந்தது. பிறகுதான் புரிந்தது. இது இறைவனுடைய வார்த்தைகள். அது அப்படித்தான் இருக்கும் என்று"

இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்