குதிகால் செருப்பில் வடியும் ரத்தம்!

பிரான்ஸின் குளிர் போர்த்திய பின்னிரவு நேரம். நண்பரின் வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு சென்ற இரண்டு இளம் பெண்கள் அவரவர் வீடுகளுக்கு கிளம்புகின்றனர். அதில் ஒருவரை அவர் வசிக்கும் அடுக்கக வளாகத்திலேயே பலாத்காரம் செய்யும் நோக்கத்தோடு மூன்று பேர் கும்பல் சுற்றிவளைக்கிறது. மூர்க்கமாக அந்தப் பெண்ணை அணுகும் மூன்று ஆண்களையும் ஆவேசமாக அந்தப் பெண் எதிர்த்துப் போராடுகிறாள். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை அட்டகாசமான சண்டைக் காட்சிகளின் வழியாக தற்காப்பு கலையும் தைரியமும் எந்த அளவுக்கு ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில் துணிவே ஒரு பெண்ணுக்கு துணையாக இருப்பதை விறுவிறுப்பான காட்சிகளின் வழியாக நமக்குக் கடத்துகிறது யூடியூபில் வெளியாகியிருக்கும் `மாயா அன்லீஷ்ட்’ குறும்படம்.

முழுக்க முழுக்க பிரான்ஸில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தோன்றும் இளம் பெண் - மாயா எஸ். கிருஷ்ணன். பிரான்ஸைச் சேர்ந்த பிரபல சண்டைப் பயிற்சிக் கலைஞர் யான்னிக் பென், திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் `துருவ நட்சத்திரம்’ படத்தில் பணிபுரியும் போதுதான் மாயாவை சந்தித்திருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளில் மாயாவிடமிருந்து வெளிப்பட்ட துல்லியமும் சண்டைக் காட்சிகளில் அவர் காட்டிய ஈடுபாடும் அவரை ஈர்த்திருக்கிறது.

முழுக்க முழுக்க மாயாவை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஒரு ஆக்ஷன் குறும்படத்தை பிரென்ஞ்சில் எடுக்கும் திட்டத்தை மாயாவிடம் தெரிவித்திருக்கிறார் யான்னிக். இப்படித்தான் இந்த குறும்படம் உருவானது.

“இயக்குநர் கௌதம் வாசுதேவ்வின் ஆதரவு இல்லாவிட்டால் இந்தப் படம் உருவாகியிருக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை இந்தக் குறும்படத்தை ஒரு `பைலட்’ புராஜெக்ட்டாகத்தான் உருவாக்கியிருக்கிறோம். சீக்கிரமே முழுக்க முழுக்க ஆக்ஷன் பியூச்சர் ஃபிலிம்மை வழங்குவோம்” என்கிறார் நம்பிக்கையை கண்களில் தேக்கியபடி மாயா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE