'காக்கா முட்டை' வெளியான நாள்: எளிமையின் கொண்டாட்டம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

சினிமாவில் சிறிய முதலீட்டில் பெரும்பாலும் அறிமுக நடிகர்களையும் அதிகம் அறியப்படாத நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்கள் சில நேரம் மிக பிரம்மாண்டமான வரவேற்பையும் மாநில எல்லைகளை மட்டுமல்லாமல் தேசிய எல்லைகளைக் கடந்த பாராட்டுகளையும் பெற்றுவிடுவதுண்டு. அப்படிப்பட்ட விலை மதிப்பில்லாத சிறு ரத்தினம் (small gem) என்று கொண்டாடத்தக்கப் படங்களில் ஒன்றுதான் 'காக்கா முட்டை'. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூவைப் போல் மிக மிக அரிதாகவே ஒரு இந்தியப் படம் அதுவும் தமிழ்ப் படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும். மணிகண்டன் எழுதி இயக்கிய முதல் படமான 'காக்கா முட்டை' அதை சாதித்துக் காட்டியது.

பள்ளிக்குச் செல்லும் வசதி இல்லாத இரண்டு ஏழைச் சிறுவர்களின் பீட்ஸா சாப்பிடும் ஆசையை முன்வைத்து நவநாகரிக வளர்ச்சிகளை அடைந்துவிட்ட இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளித்த 'காக்கா முட்டை' பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு சர்வதேச சினிமா ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற பிறகு 2015 ஜூன் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. தாய்மண்ணிலும் ரசிகர்களின் பேராதரவையும் விமர்சகர்களின் பாராட்டையும் வாரிக்குவித்தது.

பகடியும் பிரச்சாரமின்மையும்

பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பேசினாலும் ஒரு காட்சியிலும் நாடகத்தன்மை இல்லாமல் அழுது வடியாமல் பிரச்சாரத் தொனி இல்லாமல் இந்தியச் சமூகம் குறித்த மெல்லிய பகடியையும் (பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத பொருளாதாரச் சூழல் நிலவும் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு கலர் டிவிக்கள் இருக்கும்), ஏழைகளின் சுயமரியாதை உணர்வையும் அழகாகப் பதிவு செய்த படம் 'காக்கா முட்டை'. கடைசியில் பீட்சாவை சாப்பிட்டுவிட்டு 'என்னடா இது இவ்ளோ கேவலமா இருக்கு. இதுக்கு நம்ம ஆயா சுட்ட தோசையே பரவால்லடா” என்று இரண்டு சிறுவர்களும் பேசிக்கொள்வது சிறப்பானவை என்று எல்லோர் மீதும் திணிக்கப்படும் நவநாகரிக வசதிகள், ஆடம்பரங்கள் மீதான கூர்மையான எள்ளல். சுருக்கமாகச் சொல்வதென்றால் எளிமையின் சிறப்பை உணர வைத்த, கொண்டாடிய அருமையான படம் 'காக்கா முட்டை'.

தமிழுக்குக் கிடைத்த தரமான இயக்குநர்

'பொல்லாதவன்', ஆறு தேசிய விருதுகளை வென்ற 'ஆடுகளம்' போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர். குறும்படங்களின் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் செயல்பட்டுவந்த மணிகண்டன் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவின் புதிய அலை இயக்குநர்களில் முக்கியமான ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார். 'ஆண்டவன் கட்டளை', 'குற்றமே தண்டனை' அவர் கதை வசனம் எழுதிய 'கிருமி' என மணிகண்டனின் மற்ற படங்களும் சினிமா என்னும் கலை வடிவத்தில் அவருக்கு இருக்கும் வலிமையான பிடிப்பையும் தனித்தன்மை வாய்ந்த திறமையையும் வெளிப்படுத்தின. அவருடைய அடுத்த படமான 'கடைசி விவசாயி' பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.

திருப்புமுனை பெற்ற நடிகர்கள்

'காக்கா முட்டை' படத்தில் விக்னேஷ், ரமேஷ் ஆகிய சிறுவர்கள் முறையே பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை ஆகிய மையக் கதாபாத்திரங்களில் நடித்தார்கள். சிறுவர்கள் இருவரும் அறிமுகப் படத்திலேயே சிறந்த குழந்தை நடிகர்களுக்கான தேசிய விருதைப் பெற்றார்கள். அவர்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்தப் படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளர்ந்து வரும் நாயகி நடிகையாக இருந்த அவர் இளம் வயதில் இரண்டு டீனேஜ் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் துணிச்சலுக்காகவும் குடிசைப் பகுதியில் வாழும் கணவன் சிறையிலிருப்பதால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண்ணாக மிகச் சிறப்பாக நடித்தற்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அசலான நடிப்புத் திறமையைப் பறைசாற்றிய திரைப்படம் இது. யோகிபாபு, ரமேஷ் திலக் என இன்று முன்னணி நகைச்சுவை/ துணை நடிகர்களாக அறியப்படும் பலருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல முகவரியாக அமைந்தது. சிறுவர்களின் பாட்டியாக நடித்த சாந்தா மணி ரசிக்க வைத்தார். இந்தப் படத்திற்குப் பிறகு மேலும் பல படங்களில் நடித்தார். ஜி.வி.பிரகாஷின் இசையும் மணி கண்டனின் ஒளிப்பதிவும் கிஷோரின் படத்தொகுப்பும் படத்துக்குத் தேவையானதைச் சிறப்பாகத் தந்திருந்தன. கதையாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தக் காட்சி அனுபவமாகவும் படம் திருப்தி அளித்தது.

எல்லை கடந்த அங்கீகாரங்கள்

'காக்கா முட்டை' படம் முதன்முதலாக 2014 செப்டம்பர் 5 அன்று 39ஆம் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு. படம் முடிந்த பிறகு பார்வையாளர்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து நின்று தங்களுடைய உவகையை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து ரோம் திரைவிழா, துபாய் திரைவிழா எனப் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பிறகே திரையரங்குகளில் வெளியானது. ஹாலிவுட் ரிப்போர்ட்டர் உட்பட சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தப் படத்தைப் பாராட்டி எழுதின. இந்தியாவில் சிறந்த குழந்தைகள் படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய பிரிவுகளில் இரண்டு தேசிய விருதுகளையும் தமிழ்நாடு மாநில அரசு வழங்கும் சினிமா விருதுகளில் மூன்று விருதுகளையும் வென்றது.

இப்படி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த எளிமையின் அழகைக் கொண்டாடிய 'காக்கா முட்டை' போல் பல திரைப்படங்கள் வர வேண்டும். இந்தப் படத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் நினைவுகூர்வது அப்படிப்பட்ட படங்களை உருவாக்க இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE